செய்திகள்
திரிணாமுல் காங்கிரஸ் எம்பி ஷாந்தனு சென்

கொரோனாவை குணப்படுத்த பசு சிறுநீரை பரிந்துரைக்கும் அரசிடம் என்ன எதிர்பார்க்க முடியும்?- திரிணாமுல் எம்.பி.

Published On 2020-09-18 06:17 GMT   |   Update On 2020-09-18 06:17 GMT
மத்திய அரசு மறைமுகமாக தனியார் மருத்துவக் கல்லூரிகளை ஊக்குவித்து வருவதாக மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி குற்றம்சாட்டினார்.
புதுடெல்லி:

மழைக்கால கூட்டத்தொடரின் 5-வது நாளான இன்று காலை மாநிலங்களவை கூடியதும், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்பி அசோக் கஸ்தி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இரங்கல் குறிப்பை அவைத்தலைவர் வெங்கையா நாயுடு வாசித்தார். அத்துடன் அரை மணி நேரம் அவை ஒத்திவைக்கப்பட்டது.

அதன்பின்னர் அவை நடவடிக்கை தொடங்கியதும், ஹோமியோபதி மத்திய கவுன்சில் மசோதா மீது விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் பங்கேற்று பேசிய பாஜக எம்பி டாக்டர் சுதன்ஷூ திடிவேதி, ஹோமியோபதி மருந்துகளின் வலிமைக்கு அறிவியல் ஆதாரம் இல்லை என்று சிலர் கூறுவதாகவும் அது உண்மையல்ல என்றும் குறிப்பிட்டார்.

ஹோமியோபதி என்பது மருத்துவத்தின் ஒரு பிரிவு என்று கூறிய அவர், இது நோயை மட்டுமல்ல, நோயாளியையும் மையமாகக் கொண்டது என்றார். இதற்கு முன்னர் இந்திய மருத்துவத்தை ஆழமாக ஆராயவில்லை என்பது வருந்தத்தக்கது என்றும் அவர் குறிப்பிட்டார்.

திரிணாமுல் காங்கிரஸ் எம்பி ஷாந்தனு சென் பேசும்போது, ஹோமியோபதி மையங்களில் மோசமான நிலை குறித்து பேசியதுடன், மத்திய அரசை விமர்சனம் செய்தார். கொரோனாவை குணப்படுத்த பசு சிறுநீரை பரிந்துரைக்கும் அரசாங்கத்திடமிருந்து என்ன எதிர்பார்க்க முடியும்? என்று கேள்வி எழுப்பினார் ஷாந்தனு சென். மேலும், மத்திய அரசு மறைமுகமாக தனியார் மருத்துவக் கல்லூரிகளை ஊக்குவித்து வருவதாகவும் குற்றம்சாட்டினார்.
Tags:    

Similar News