கோவில்கள்
கலியுக முடிவைச் சொல்லும் ‘ஒற்றைத் தூண்’ கோவில்

கலியுக முடிவைச் சொல்லும் ‘ஒற்றைத் தூண்’ கோவில்

Published On 2021-12-23 01:36 GMT   |   Update On 2021-12-23 05:53 GMT
சிறப்புமிக்க ஆலயங்களில் ஒன்றாகவும், பல ஆச்சரியங்களை உள்ளடக்கியதாகவும் இருப்பதுதான், ஹரிஷ்சந்திரகாட் கோவில். இது மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள கிரேஷ்வர் என்ற இடத்தில் அமைந்துள்ளது.
இந்தியாவில் அதிசயங்களும், ஆச்சரியங்களும் மிகுந்த ஆலயங்கள் பல இருக்கின்றன. சில ஆலயங்கள் புராணங்களோடும், யுகங்களோடும், கலியுகத்தோடும் தொடர்புடையவையாகவும் அறியப் படுகின்றன. அப்படி ஒரு சிறப்புமிக்க ஆலயங்களில் ஒன்றாகவும், பல ஆச்சரியங்களை உள்ளடக்கியதாகவும் இருப்பதுதான், ஹரிஷ்சந்திரகாட் கோவில். இது மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள கிரேஷ்வர் என்ற இடத்தில் அமைந்துள்ளது.

இந்த ஆலயமானது கலாசூரி என்ற மன்னனால், கி.பி. 6-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக குறிப்புகள் சொல்கின்றன. இந்த கோவிலுக்கு அருகாமையில் ‘கேதாரேஸ்வரர்’ என்ற சிவலிங்கம் அமைந்த குகை ஒன்றும் இருக்கிறது. இது புராணக் கதைகளோடும், கலியுகத்தின் முடிவு பற்றிய குறிப்புகளைச் சொல்லும் அதிசயம் மிகுந்த கோவிலாகவும் பக்தர்களால் பார்க்கப்படுகிறது. இந்த கேதாரேஸ்வரர் சிவலிங்கம் அமைந்த குகையானது, நீரால் நிரம்பியதாக இருக்கிறது. இதில் எப்போதும் முழங்கால் அளவு நீர் நிரம்பிய நிலையிலேயே காணப்படும். மழை காலங்களில் இடுப்பளவு தண்ணீர் இருக்கும்.

நீர் நிரம்பிய இந்த குகையில் நீரின் மையத்தில் 5 அடி உயரத்தில் சிவலிங்கம் ஒன்று காணப்படுகிறது. இந்த சிவலிங்கத்தின் பெயர்தான், ‘கேதாரேஸ்வரர்’ என்பதாகும். இந்த சிவலிங்கத்தைச் சுற்றிலும் நான்கு தூண்கள் அமைந்துள்ளன. அந்த நான்கு தூண்களும், குகையின் மேல் பகுதியையும், பூமியின் அடிப்பகுதியையும் இணைக்கும் வகையில் அமைந்திருக்கின்றன. இந்த நான்கு தூண்களும், கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் ஆகிய நான்கு யுகங்களைக் குறிப்பதாக நம்பப்படுகிறது.

இந்த தூண்களில் தற்போது ஒற்றைத் தூண் மட்டுமே எந்தவித சேதாரமும் இன்றி முழுமையாக காணப்படுகிறது. மற்ற மூன்று தூண்களும் உடைந்து போய்விட்டன. ஒவ்வொரு யுகம் முடியும் போதும் ஒவ்வொரு தூண் அழிந்து விடுவதாகவும், தற்போது கலியுகத்தைக் குறிக்கும் தூண் மட்டுமே எஞ்சியிருப்பதாகவும், கலியுகம் முடியும் தருவாயில், அந்த யுகத்தின் கடைசி நாளில் எஞ்சியிருக்கும் ஒற்றைத் தூணும் அழிந்துவிடும் என்பது இங்குள்ள ஐதீகமாக உள்ளது.

தூண்களுக்கு நடுவே அமைந்த சிவலிங்கத்தை சுற்றியுள்ள நீர் மிகவும் குளிர்ச்சியானது. இந்த நீருக்குள் இறங்கினால்தான், சிவலிங்கத்தை தரிசனம் செய்ய முடியும். மழைக்காலங்களில் இந்தக் குகைக்குள் இறங்கிச் சென்று சிவலிங்கத்தை தரிசனம் செய்வது என்பது கொஞ்சம் சிரமமான காரியம்தான். கலியுகத்தைக் குறிக்கும் வகையில் அதிசயமாகவும், ஆச்சரியமாகவும் அமைந்த இந்த ஆலயத்திற்கு சென்று வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
Tags:    

Similar News