உள்ளூர் செய்திகள்
.

காவேரிப்பட்டணத்தில் பரபரப்பு: லாட்ஜில் என்ஜீனியரை அடைத்து வைத்து ரூ.1.50 லட்சம் கேட்டு மிரட்டல் 3 பேர் கும்பல் கைது

Published On 2022-04-16 07:04 GMT   |   Update On 2022-04-16 07:04 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் லாட்ஜில் என்ஜீனியரை அடைத்து வைத்து ரூ.1.50 லட்சம் கேட்டு மிரட்டிய 3 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி, 

கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் எட்மண்ட் ஜார்வின். இவரது மகன் ஆல்வின் ரெய்ட் பார்கு (வயது 31). இவர் பெங்களூருவில் உள்ள ஐ.டி. கம்பெனியில் என்ஜீனியராக வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் விடுமுறையையொட்டி கடந்த 14&ந் தேதி பெங்களூருவில் இருந்து நாகர்கோவிலுக்கு காரில் ஆல்வின் புறப்பட்டு சென்றார். அப்போது கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம்அடுத்த சுப்பிரமணியபுரம் என்ற இடத்தில் வந்த போது ஆல்வின் ஓட்டி வந்த கார், எதிர்பாராத விதமாக ஒரு மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் காயம் அடைந்தனர். உடனே ஆல்வின், காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதற்கிடையே காயம் அடைந்த 2 பேரின் உறவினர்கள் என்று கூறி ஆல்வினிடம் 3 பேர் பேச்சு கொடுத்தனர். விபத்தை ஏற்படுத்தியதால் தங்களுக்கு இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று தெரிவித்தனர். அதாவது ரூ.1.50 லட்சம் வரை பேரம் பேசி ஆல்வினை மிரட்டியதாக தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆல்வின் வாக்குவாதம் செய்தார். இதனால் ஆத்திரம் அடைந்த 3 பேர் கும்பல் ஆல்வினை கடத்தினர். பின்னர் காவேரிப்பட்டணம் பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் அவரை சிறைவைத்தனர். இதைதொடர்ந்து லாட்ஜில் வைத்து ஆல்வின் தந்தை எட்வினிடம் போன் செய்தனர்.

அப்போது தங்களது மகனின் கார் மோதியதில் 2 பேர் காயம் அடைந்துள்ளனர். எனவே எங்களுக்கு ரூ.1.50 லட்சம் கொடுத்து பைசல் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் ஆல்வினை நாங்கள் விட மாட்டோம் என்று மிரட்டினர். இதைகேட்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி காவேரிப்பட்டணம் போலீசாருக்கு ரகசியமாக தகவல் கொடுக்கப்பட்டது.
தப்பி வந்தார்

இதற்கிடையே லாட்ஜில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த ஆல்வின், அந்த மிரட்டல் கும்பலிடம் இருந்து நைசாக தப்பி வந்தார். பின்னர் அவர் நேராக காவேரிப்பட்டணம் போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் செய்தார். அதில் தன்னை 3 பேர் கொண்ட கும்பல் தன்னை கடத்தி லாட்ஜில் வைத்து பணம் கேட்டு மிரட்டியதாக தெரிவித்தார். இதையடுத்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

3 பேர் கைது

போலீசாரின் விசாரணையில் ஆல்வினை கடத்தி பணம் கேட்டு மிரட்டியவர்கள், காவேரிப்பட்டணம் அம்பேத்கார் தெருவை சேர்ந்த சந்தோஷ் (27), அன்பரசன் (26), லோகநாதன் (25) என தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து இந்த கடத்தல் விவகாரத்தில் வேறு யாரும் சம்பந்தப்பட்டு உள்ளார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

என்ஜீனியரை கடத்தி லாட்ஜில் வைத்து பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் காவேரிப்பட்டணம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News