ஆன்மிகம்

கடன், கல்யாணத் தடை நீக்கும் நரசிம்மர் கோவில்

Published On 2019-06-21 07:59 GMT   |   Update On 2019-06-21 07:59 GMT
கீழப்பாவூர் நரசிம்மர் ஆலயம் கடன் தொல்லை, கல்யாணத் தடை, நீண்ட நாள் நோய், நீதிமன்ற வழக்கு ஆகியவற்றிற்குரிய பரிகாரத் தலமாகும்.
சுமார் 300 வருடங்களுக்கு முன்னால் இத்திருக்கோவில் அமைந்திருக்கும் பகுதியில் சாயரட்ச வேளையில் சிங்கம் கர்ஜிக்கும் சத்தம் கேட்குமாம். இதனால் பக்தர்கள் அப்பகுதிக்குச் செல்லப் பயந்தனர். பிற்காலங்களில் நரசிம்மருக்கு இளநீர் மற்றும் பால் அபிஷேகம் செய்ய ஆரம்பித்த பிறகு சாந்த சொரூபியாக மாறிவிட்டார் என்று கூறுகின்றனர்.

தலம், மூர்த்தி, தீர்த்தம் மட்டுமின்றிப் பல்வேறு சிறப்புகள் நிறைந்தது கீழப்பாவூர் நரசிம்மர் ஆலயம். இந்தியாவில் மூன்று இடங்களில்தான் 16 திருக்கரங்களுடன் கூடிய நரசிம்மர் ஆலயம் உள்ளது. ஒன்று இராஜஸ்தான் மாநிலத்திலும், மற்றொன்று பாண்டிச்சேரி அருகே சிங்ககிரி எனும் சிறுகுன்றிலும் உள்ளது. மூன்றாவதாகக் கீழப்பாவூரில் மட்டுமே சமதளமான பகுதியில் ஆலயம் அமைந்துள்ளது.

எல்லாவற்றிற்கும் மேலாக ரிஷிகளுக்குக் காட்சி கொடுத்தது மட்டுமின்றி, நிரந்தரமாகத் தங்கி இருப்பதும் இங்கு மட்டுமே! இவ்வாலயத்தில் கால் வைத்ததும் பதற்றம், கவலை, மன அழுத்தம் முற்றிலும் நீங்குகிறது.

சுவாதி நட்சத்திர வழிபாடு இங்குச் சிறப்புடன் நடந்து வருகிறது. அன்று 16 வகை மூலிகைகளால் மூலமந்திர ஹோமம் நடைபெறுகிறது. பால், இளநீர் அபிஷேகம், நீராஞ்சனம் வழிபாடு, நெய்தீபம் ஏற்றுதல் ஆகியவற்றுடன் சிறப்புப் பூசைகளும் நடக்கின்றன.

கடன் தொல்லை, கல்யாணத் தடை, நீண்ட நாள் நோய், நீதிமன்ற வழக்கு ஆகியவற்றிற்குரிய பரிகாரத் தலமாகும். செவ்வாய், புதன், சனி முதலிய நாள்களும் திருவோணம், பிரதோஷம், புரட்டாசி சனிக்கிழமை, நரசிம்ம ஜெயந்தி முதலிய தினங்களும் மற்றும் மாலைவேளையும் வழிபடுவதற்கு உரிய நாள்களாகும்.
Tags:    

Similar News