லைஃப்ஸ்டைல்
குடும்பத்தில் பெண்களின் பங்கு முதன்மையானது

குடும்பத்தில் பெண்களின் பங்கு முதன்மையானது

Published On 2020-01-30 03:33 GMT   |   Update On 2020-01-30 03:33 GMT
மனைவியானவள், தனது கணவனை மட்டும் அல்ல, கணவனது வீட்டையும் விட்டுக்கொடுக்காமலும் பார்த்து கொள்ள வேண்டும். இதன் மூலம் பலர் முதியோர் இல்லம் செல்வது தடுக்கப்படும்.
குடும்பம் ஒரு கதம்பம் என்பதை விட குடும்பம் ஒரு பல்கலைக்கழகம். இதில் பெண்களின் பங்கு முதன்மையானது. படித்த பெண்கள் தனது குடும்ப பாரம்பரியத்தை அறிவுப்பாதையில் அழைத்து செல்லும் அகல் விளக்கு.

20-ம் நூற்றாண்டில் பெண்கள் பல்வேறு துறைகளில் சாதித்து வருகின்றனர். ஆணுக்கு நிகர் பெண் என்ற நிலையை எட்டிக்கொண்டிருக்கிறார்கள். பெண்கள் கால் பதிக்காத துறையே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவர்களது வளர்ச்சி இருந்து வருகிறது. பெண்ணுக்கு சமஉரிமை, சுதந்திரம் உள்ளிட்ட எல்லாம் வழங்கப்பட்டு உள்ளது.

ஆனால் ஒரு பெண் மணம் முடிந்து செல்லும் போது திருமதி அந்தஸ்து பெறுகிறார். சமூக, பொருளாதார வாழ்வியலில் பெண்ணின் தனித்திறமைகள் பளிச்சிட்டாலும், குடும்ப வாழ்வியலில்தான் அவரது பெருமைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

ஆம்...ஒரு பெண்ணின் திருமண வாழ்க்கை என்பது இரு தீவுகளை இணைக்கும் பாலமாக இருக்க வேண்டும் என்பது தான் உறவுகளின் ஆசை. ஆனால் இந்த வாழ்க்கை முறையில் பல பெண்கள் தடுமாறுகின்றனர். அதாவது மருமகள், மாமியார் இடையே மனகசப்பு. இதனால் ஏற்படும் விளைவு தனிக்குடித்தனம். தன் தாய்க்கு பின் அடுத்து தன் மாமியார் தான் அடுத்த தாய் என்பதை புகுந்த வீட்டுக்கு செல்லும் பெண்கள் மறக்க கூடாது.

பிறந்த வீட்டில் இருந்து பெண் ஒரு வீட்டிற்கு வாழ செல்லும்போது, அங்கே இருப்பது மாமியார் இல்லை, மற்றொரு தாய் என்று நினைத்து செல்ல வேண்டும். அதைப்போல தன்வீட்டிற்கு வாழ வரும் பெண் மருமகள் இல்லை, தனது மகள் என்று மாமியார் நினைக்க வேண்டும். இவ்வாறு நினைத்தால் குடும்பத்தில் ஏற்படும் பல பிரச்சினைகளுக்கு இடமில்லை. மனைவியானவள், தனது கணவனை மட்டும் அல்ல, கணவனது வீட்டையும் விட்டுக்கொடுக்காமலும் பார்த்து கொள்ள வேண்டும். இதன் மூலம் பலர் முதியோர் இல்லம் செல்வது தடுக்கப்படும்.

எதற்கு எடுத்தாலும் மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது தான், கணவன்-மனைவியின் மணவாழ்க்கையில் பிரச்சினை ஏற்படுகிறது. தேவையில்லாத சண்டைகளும் வருகிறது. இதனால் மணவாழ்க்கை கசப்பாகி விடுகிறது. இதன் காரணமாக தான் உறவுகளில் விரிசல் ஏற்பட்டு, பலர் தங்கள் வாழ்க்கையை தொலைத்து விடுகின்றனர். கற்பனையோடு வாழாமல் காலத்தோடு ஒத்து வாழுங்கள். கிடைத்ததை கடவுளின் வரமாக நினைத்து ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து வாழ வேண்டும். அப்போது தான் ஒரு பெண் தனது மணவாழ்வில் மனம் வீசும் மாற்றத்தை கொண்டு வரமுடியும். இதனை பெண்கள் கவனத்தில் கொண்டு வாழும் போது இனிய குடும்பம் என்றும் தொடரும்.

பி.பிந்து, 3-ம் ஆண்டு பி.பி.ஏ., ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி. கோவை.
Tags:    

Similar News