செய்திகள்

தி.மு.க. வருமானம் ரூ.35 கோடியாக உயர்வு

Published On 2019-03-08 09:29 GMT   |   Update On 2019-03-08 09:29 GMT
2016-17-ம் ஆண்டு தி.மு.க.வின் மொத்த வருமானமே ரூ.3.78 கோடியாகத்தான் இருந்தது. ஒரே ஆண்டில் அது ரூ.35.74 கோடியாக உயர்ந்துள்ளது. #DMK
சென்னை:

இந்தியாவில் உள்ள மாநில கட்சிகள் ஒவ்வொன்றுக்கும் 2017-18-ம் ஆண்டு எவ்வளவு வருமானம் கிடைத்துள்ளது என்ற விபரத்தை தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. மொத்தம் 37 கட்சிகளின் வரவு-செலவு மற்றும் வருமானம் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில கட்சிகளில் உத்தரபிரதேசத்தில் பிரதான கட்சியாக திகழும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி வருவாயில் முதல் இடத்தை பெற்றுள்ளது. அந்த கட்சிக்கு 2017-18-ல் ரூ.47.19 கோடி கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டைவிட 42.98 சதவீதம் குறைவாகும்.

தி.மு.க.வுக்கு 2வது இடம் கிடைத்துள்ளது. 2017-18-ம் ஆண்டு தி.மு.க.வின் மொத்த வருவாய் ரூ.35.74 கோடி ஆகும். இது முந்தைய ஆண்டு களுடன் ஒப்பிடுகையில் 845.71 சதவீதம் அதிகம் ஆகும்.

2016-17-ம் ஆண்டு தி.மு.க.வின் மொத்த வருமானமே ரூ.3.78 கோடியாகத்தான் இருந்தது. ஒரே ஆண்டில் அது ரூ.35.74 கோடியாக உயர்ந்துள்ளது. அதற்கு முக்கிய காரணம், தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் கட்டணம் செலுத்தி தங்களது உறுப்பினர் அட்டையை புதுப்பித்ததுதான் என்று தெரிய வந்துள்ளது.

உறுப்பினர்களின் கட்டணப்பதிவு மூலம் தி.மு.க.வுக்கு ரூ.22.14 கோடி கிடைத்துள்ளது. இதுதவிர வங்கிகளில் உள்ள தி.மு.க.வின் பண முதலீடுகள் மூலம் வட்டியாக ரூ.11.77 கோடி கிடைத்துள்ளது.

சமாஜ்வாடி, தி.மு.க.வை தொடர்ந்து சந்திரசேகரராவின் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி வருமானத்தில் 3வது இடத்தில் இருக்கிறது. அந்த கட்சிக்கு ரூ.27.27 கோடி வருவாய் கிடைத்துள்ளது. ரூ.19.4 கோடி வருவாயுடன் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சி உள்ளது.

அ.தி.மு.க.வின் வருவாய் 2017-18-ல் கணிசமாக சரிந்துவிட்டது. 2016-17-ம் ஆண்டு அ.தி.மு.க.வின் வருமானம் ரூ.48.88 கோடி என்று கணக்கு காட்டப்பட்டு இருந்தது. தற்போது அது ரூ.12.72 கோடியாக குறைந்து விட்டது.

அ.தி.மு.க.வின் வருமானம் ஒரே ஆண்டில் 74 சதவீதம் குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News