ஆன்மிகம்
திருப்பதி

திருப்பதியில் இலவச தரிசன டோக்கன் பெற குவிந்த பக்தர்கள்

Published On 2021-09-21 06:00 GMT   |   Update On 2021-09-21 06:00 GMT
ஆந்திராவில் உள்ள வெளிமாவட்டத்தை சேர்ந்த பக்தர்களும், தமிழகம், கர்நாடகா, தெலுங்கானா உள்பட வெளிமாநில பக்தர்களும் இலவச டோக்கன் பெறுவதற்காக இரவிலேயே திருப்பதிக்கு வந்து விடுகின்றனர்.
திருப்பதி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த மே மாதம் 5ம் தேதி முதல் கொரோனா பரவல் காரணமாக இலவச தரிசன டோக்கன் விநியோகம் நிறுத்தப்பட்டது.

ஆனால், ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டை ஆன்லைன் மூலம் பெற்ற பக்தர்களும், வி.ஐ.பி. பிரேக் தரிசனம் மூலமும், ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட் பெற்றவர்களும் வழக்கம் போல் தரிசனத்திற்கு சென்று வந்தனர்.

இதனால் இலவசமாக ஏழுமலையானை சாமானிய பக்தர்கள் தரிசிக்க இயலாமல் போனது. இதுகுறித்து விமர்சனங்கள் எழுந்தன.

இந்த நிலையில் சுமார் 4 மாதங்கள் கழித்து சோதனை அடிப்படையில் சித்தூர் மாவட்ட பக்தர்கள் மட்டும் 2 ஆயிரம் பேர் இலவச தரிசனத்தில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் வழக்கம் போல் அனைத்து மாநில பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன் வழங்க வேண்டுமென கோரிக்கை எழுந்தது. இதையடுத்து நேற்று முதல் வெளிமாநில பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள் வழங்க தேவஸ்தானம் தீர்மானித்தது.

இதனை அறிந்த பக்தர்கள் தற்போது திருப்பதியில் தரிசனம் செய்ய குவிந்து வருகின்றனர். தினமும் 8 ஆயிரம் பேருக்கு மட்டுமே இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படுகிறது. ஆதார் அட்டையை ஸ்கேன் செய்து டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது.

புரட்டாசி மாதம் என்பதால் ஆந்திராவில் உள்ள வெளிமாவட்டத்தை சேர்ந்த பக்தர்களும், தமிழகம், கர்நாடகா, தெலுங்கானா உள்பட வெளிமாநில பக்தர்களும் இலவச டோக்கன் பெறுவதற்காக இரவிலேயே திருப்பதிக்கு வந்து விடுகின்றனர்.

திருப்பதி பஸ் நிலையம் எதிரே உள்ள ஸ்ரீநிவாசம் பக்தர்கள் தங்கும் விடுதியில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். டிக்கெட் பெறுவதற்காக கவுண்டர்களில் வரிசையில் காத்து நிற்கின்றனர். காலை 6 மணி முதல் டோக்கன்கள் வழங்கும் பணி தொடர்கிறது.

டோக்கன் பெற்ற பக்தர்கள் ஆர்வமுடன் சென்று ஏழுமலையானை தரிசித்து செல்கின்றனர்.
Tags:    

Similar News