லைஃப்ஸ்டைல்
குழந்தைகளைத் தாக்கும் தொற்று நோய்கள்

குழந்தைகளைத் தாக்கும் தொற்று நோய்கள்

Published On 2021-08-19 06:06 GMT   |   Update On 2021-08-19 06:06 GMT
புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்குத் தொற்று நோய்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம். குழந்தைகளுக்கு என்னென்ன தொற்று நோய்கள் பரவுகின்றன என்று அறிந்து கொள்ளலாம்.

குழந்தைகளுக்கு ஏற்படும் தொற்றுநோய்களில் 90 சதவிகிதம், குழந்தைகளின் பாதுகாப்பில் சரியான கவனம் இல்லாததால் நிகழ்கிறது. உலக சுகாதார நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கை இது.

சளி, இருமல்

வைரஸ் பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகள் நம் உடலில் இருக்கின்ற நோய் எதிர்ப்பு சக்திக்கு எதிராகப் போராடுவதால் ஏற்படும் பாதிப்பு தான் சளி மற்றும் இருமல். காற்று மற்றும் தண்ணீரில் உள்ள மாசு, கைகளைச் சரியாகச் சுத்தம் செய்யாமல் உணவு ஊட்டுதல் போன்ற காரணங்களால் தொற்று நோய்கள் குழந்தைகளுக்கு ஏற்படுகின்றன. இதனால் நுரையீரல் பாதிப்புக்கு உள்ளாகும்.

காய்ச்சல்

இது தொற்று மூலமாகவும் பரவலாம். தொற்று அல்லாமலும் பரவலாம். ஆனால், 90 சதவிகிதக் காய்ச்சல் தொற்று மூலமாகத் தான் பரவுகிறது. மூக்கடைப்பு மற்றும் மூக்கில் தொடர்ந்து நீர் வடிதல், தொடர்ந்து அழுது கொண்டு இருப்பது போன்ற அறிகுறிகளோடு, காய்ச்சல் சில குழந்தைகளுக்கு வலிப்பைக் கூட ஏற்படுத்தும்.

வயிற்றுப் போக்கு

பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றினால் ஏற்படும் பாதிப்பு இது. சரியாகக் காய்ச்சி வடிகட்டப்படாத குடிநீர், மூடி வைக்காத உணவு போன்றவற்றைக் குழந்தைக்குக் கொடுப்பதனாலும், கைகளைக் கழுவாமல் உணவு ஊட்டுவதாலும் குழந்தைக்கு கிருமித் தொற்று ஏற்பட்டு வயிற்றுப் போக்கு ஏற்படும். சில சமயங்களில் வயிற்றுப் போக்குடன் வாந்தியும் இருக்கும். இரண்டு வயதுக்கு மேற்பட்ட
குழந்தை
களுக்கு டைபாய்ட் வரலாம். அழுக்குப் படிந்த கை விரல் மற்றும் நகங்களுடன் குழந்தைகள் உணவினை அள்ளி உண்ணும் போது கிருமித் தொற்று ஏற்பட்டு வயிற்றுப் போக்கு ஏற்படும்.

சின்னம்மை

கோடை காலங்களில் இது குழந்தைகளை அதிகமாகத் தாக்கும். நோய்த் தொற்று உடையவரின் சுவாசக் காற்றின் மூலம் பரவும் என்பதால் அக்கம் பக்கத்தில் இருக்கும் குழந்தைகளுக்குக் காய்ச்சல் இருந்தால் உங்கள் குழந்தையை அவர்கள் வீட்டுக்குக் கொண்டு செல்லாமல் இருக்க வேண்டும்.

மணல் வாரி அம்மை

இதுவும் வைரஸ் தொற்று தான். குழந்தையின் முகம், கண்கள் சிவந்து காணப்படும். மூக்கில் நீர் வடியும். தோலில் மணலை அள்ளித் தெளித்தது போல பொரிப் பொரியாகக் காணப்படும். வாய்ப்புண், வயிற்றுப் போக்கு, நிமோனியா போன்ற பாதிப்புகள் ஏற்படும். இதுதவிர வைட்டமின் ஏ சத்துக் குறைபாடும் காசநோய் பாதிப்பும் கூட உருவாகலாம்.

மஞ்சள் காமாலை

பிறந்து 10 முதல் 15 நாட்கள் ஆன பிறகே குழந்தையின் கல்லீரல் முழுமையான செயல் திறன் பெறும். எனவே, குழந்தையின் உடலில் ஏற்படும் மஞ்சள் நிறமாற்றமானது இரண்டு வாரங்களுக்குள் சரியாகிவிடும். ஆனால் இரண்டு வாரங்களுக்கும் மேலாகத் தொடர்ந்தால் அது மஞ்சள் காமாலை நோயாக இருக்கலாம். ஹெபடைடிஸ் ஏ மற்றும் பி என்கிற வைரஸ் மூலமாக ஏற்படுவது மஞ்சள் காமாலை. சுகாதாரம் இல்லாத குடிநீர் மற்றும் உணவு மூலமாகக் குழந்தைகளுக்கு இது பரவும் என்பதால் இது போன்ற விடயங்களில் கவனம் தேவை.

சிறுநீரகப் பிரச்சினை

குழந்தைகள் சிறுநீர் மலம் கழித்த பின்னர் சரியாக சுத்தம் செய்யவில்லை எனில், சிறுநீர்த் தாரையில் கிருமித் தொற்று ஏற்படும். இதனால் குழந்தைகளின் சிறுநீர் வெளியேறும் அளவு குறையும். சிறுநீர் கழிப்பதற்காக உள்ளாடையைக் கழற்றுவதற்கு முன்பாகவே சிறுநீர் கழித்து விடுவார்கள். மேலும் சிறுநீர் கழிக்கும் போது அந்தப் பகுதியில் வலி மற்றும் எரிச்சல் ஏற்படும்.

Tags:    

Similar News