உள்ளூர் செய்திகள்
போராட்டம் (கோப்பு படம்)

பழவேற்காடு அருகே மேம்பால கட்டுமான இடத்தில் தவறி விழுந்து வாலிபர் பலி- கிராம மக்கள் போராட்டம்

Published On 2022-01-11 09:14 GMT   |   Update On 2022-01-11 09:19 GMT
பழவேற்காடு அருகே மேம்பால கட்டுமான இடத்தில் தவறி விழுந்து வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொன்னேரி:

பழவேற்காடு பசியாவரம் செல்லும் வழியில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

தற்போது பெய்த பருவமழை காரணமாக மேம்பாலம் கட்டுவதற்காக போடப்பட்ட மணல் சாலை கரைந்து தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. தற்போது மீண்டும் அங்கு கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு நடை பெற்று வருகிறது.

அப்பகுதி வழியாக பழவேற்காட்டிற்கு எடமணி, சாட்டான் குப்பம், பசியாவரம், ரஹ்மத் நகர், எடமணி குப்பம் மக்கள் சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் கட்டுமான பணி நடந்த இடத்தில் எடமணி காலனியைச் சேர்ந்த ராஜேஷ் (38) என்பவர் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் தவறி விழுந்ததில் கல்லில் தலை மோதி பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவரை பழவேற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் டாக்டர்கள் பரி சோதித்தபோது ராஜேஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதனால் அப்பகுதி மக்கள் மேம்பால பணி பாதுகாப்பில்லாமல் நடந்து வருவதாகவும் கட்டுமான பொருட்களை வழியிலே போட்டிருப்பதாகவும், குற்றம் சாட்டினர்.

மேம்பால பணியை விரைந்து முடிக்கவும், இறந்த நபர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கவும் கோரி ஜே.சி.பி. எந்திரம் மற்றும் 2 லாரிகளை சிறைப்பிடித்து மேம்பால பணியை தடுத்து நிறுத்தி முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் துரை.சந்திர சேகர் எம்.எல்.ஏ. திருப்பாலைவனம், போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதுபற்றி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுட்ட கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

இதுகுறித்து திருப்பாலை வனம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News