ஆன்மிகம்
அம்மன்

திருக்கடையூர் அபிராமி அம்மன்

Published On 2020-01-26 05:38 GMT   |   Update On 2020-01-26 05:38 GMT
அமாவாசையை பவுர்ணமியாக்கிய வைபவம் ஒவ்வொரு தை அமாவாசை அன்றும் திருக்கடையூரில் நடக்கும். இந்த வைபவம் தோன்றிய கதையை அறிந்து கொள்ளலாம்.

திருக்கடையூரில் வசித்த சுப்பிரமணியன் என்ற பக்தர் அபிராமி அம்மனின் மீது தீவிர பக்தி கொண்டிருந்தார். நிலா போல ஒளித்தன்மை கொண்ட அம்பிகையின் முக அழகில் எப்போதும் லயித்திருப்பார். ஒருசமயம், அவர் அம்பிகைய தரிசித்துக் கொண்டிருந்தபோது, சரபோஜி மன்னர் அங்கு வந்தார். அவரைக் கவனிக்காத சுப்பிரமணியன், மன்னருக்குரிய மரியாதையை செய்யவில்லை. கோபம் கொண்ட மன்னர், அவர் அருகில் சென்று இன்று என்ன நாள்? என்று கேட்டார்.

அம்பிகையின் முகத்தையே நினைத்துக் கொண்டிருந்தவர் பவுர்ணமி என்று சொல்லிவிட்டார். மன்னருக்கு கோபம் வந்துவிட்டது. ஏனென்றால் அன்று அமாவாசை. மன்னர் அவரிடம் இன்று பவுர்ணமி என நிரூபிக்காவிட்டால் தண்டனைக்கு ஆளாக நேரிடும்! என எச்சரித்துச் சென்றுவிட்டார். அபிராமி அம்பிகை மீது மிகுந்த நம்பிக்கை கொண்ட சுப்பிரமணியன் அமாவாசை தினமான அன்று நிலா உதிக்க வேண்டும் என வேண்டி, அம்பிகையின் புகழைச் சிறப்பித்து நூறு பாடல்கள் பாடினார்.

அதுவே அபிராமி அந்தாதி என்னும் அற்புதமான பொக்கிஷ நூலாகும். அவரது பாடலில் லயித்த அம்பிகை, நிலவை ஒளிரச் செய்து, அவரது பக்தியை உலகம் உணரச் செய்தாள். மேலும் தனது பெயராலேயே, அவர் அழைக்கும்படியாகவும் அருள்புரிந்தாள். இதனால் அவர் அபிராமி பட்டர் என்று பெயர் பெற்றார். அமாவாசையை பவுர்ணமியாக்கிய வைபவம் ஒவ்வொரு தை அமாவாசை அன்றும் திருக்கடையூரில் நடக்கும்.
Tags:    

Similar News