ஆன்மிகம்
பேரூர் படித்துறை

இன்று மகாளய அமாவாசை பேரூர் படித்துறையில் குவிந்த பக்தர்கள்

Published On 2020-09-17 08:53 GMT   |   Update On 2020-09-17 08:53 GMT
இன்று மகாளய அமாவாசையை முன்னிட்டு கோவை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கோவில் நிர்வாகத்தின் தடையை மீறி தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக பேரூர் படித்துறைக்கு வந்த வண்ணம் இருந்தனர்.
மகாளய அமாவாசை அன்று தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக கோவை, திருப்பூர், கேரளாவில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பேரூர் படித்துறையில் கூடுவார்கள்.

தற்போது கொரோனா பரவல் காரணமாக ஆடி அமாவாசை, ஆடி பெருக்கு போன்ற நிகழ்வுகளின் போது பேரூர் படித்துறையில் கூட தடை விதிக்கப்பட்டது. அதன்படி மகாளய அமாவாசையான இன்றும் பேரூர் படித்துறையில் பக்தர்கள் கூடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க கோவில் நிர்வாகம் தடை விதித்தது. பக்தர்கள் யாரும் வர வேண்டாம் என்றும், தங்கள் வீட்டிலேயே தர்ப்பணம் கொடுத்து கொள்ளுங்கள் என்றும் அறிவுறுத்தி இருந்தது.

இன்று மகாளய அமாவாசையை முன்னிட்டு கோவை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கோவில் நிர்வாகத்தின் தடையை மீறி தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக பேரூர் படித்துறைக்கு வந்த வண்ணம் இருந்தனர்.

அவர்கள் அம்மன் தோப்பு, ஆற்று படுகை, விநாயகர் கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் திரண்டு அரிசி, பருப்பு, காய்கறிகள், எள் மற்றும் முன்னோர்களுக்கு பிடித்தமான உணவுகளை படையலாக வைத்து பிண்டம் பிடித்து தங்கள் முன்னோர்களை நினைத்து வழிபாடு நடத்தினர்.

அதனை தொடர்ந்து தாங்கள் பிடித்த பிண்டங்களை எடுத்து சென்று ஆற்றில் கரைத்து நீராடினார்கள். பின்னர் பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு சென்று நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

தடையை மீறி பக்தர்கள் கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்ததால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ஒலி பெருக்கி மூலம், கொரோனா பேரிடர் காலத்தில் இவ்வளவு பேர் கூடக் கூடாது என அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனால் அதனையும் மீறி கூடி இருக்கிறீர்கள்.

இங்கிருந்து பக்தர்கள் அனைவரும் உடனடியாக கலைந்து செல்ல வேண்டும் என அறிவுறுத்தினர். இருப்பினும் பக்தர்கள் அதனை காதில் வாங்கி கொள்ளாமல் திதி கொடுத்தனர்.

இதையடுத்து போலீசார் உடனடியாக அங்கு சென்று பொதுமக்களை அங்கிருந்து திருப்பி அனுப்பினர். இதையடுத்து பக்தர்கள் படித்துறைக்கு செல்லாமல் பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு திரும்பி சென்றனர்.
Tags:    

Similar News