செய்திகள்

பெங்களூரில் பெண் பத்திரிகையாளர் கொலையில் மராட்டிய வாலிபர் சிக்கினார்

Published On 2018-06-12 07:28 GMT   |   Update On 2018-06-12 07:28 GMT
பெங்களூரில் பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை தொடர்பாக மராட்டிய வாலிபர் ஒருவர் சிக்கினார். அவருக்கு கொலையில் தொடர்பு உள்ளதா என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.#GauriLankeshmurder

பெங்களூர்:

பெங்களூரைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் (வயது55) கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ந்தேதி இரவு ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள வீட்டுக்கு வெளியே அடையாளம் தெரியாத மர்ம மனிதர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அவரது வீட்டு சி.சி. டி.வி. கேமராவில் 3 கொலையாளிகளின் படங்கள் பதிவாகி இருந்தன. அவர்கள் ஹெல்மெட் அணிந்து இருந்ததால் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது. கவுரி லங்கேஷ் கொலை வழக்கை கர்நாடக உளவுப் பிரிவு ஐ.ஜி. பி.கே.சிங் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது.

கவுரி லங்கேஷ் சுதந்திர சிந்தனையாளர். உரிமைகளுக்காக குரல் கொடுத்து வந்தார். அவரது கொலைக்கு காங்கிரஸ் தலைவர்கள் சோனியாகாந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

கவுரி லங்கேஷ் கொலை தொடர்பாக முக்கிய புள்ளியான மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த நவீன்குமார் என்பவர் பெங்களூர் பஸ் நிலையம் அருகே கடந்த பிப்ரவரி மாதம் 18-ந்தேதி கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து நவீன ரக துப்பாக்கியை போலீசார் கைப்பற்றினர்.

புலனாய்வு குழுவினர் விசாரித்தபோது அவருக்கு நாட்டின் மற்ற பகுதிகளைச் சேர்ந்த வலதுசாரி பங்கரவாத குழுக்களுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

அவர் கொடுத்த தகவலின் பேரில் இந்த கொலையில் தொடர்புடைய 4 பேரின் உருவப்படங்களை போலீசார் வரைந்து வெளியிட்டு தேடி வந்தனர்.

நவீன்குமார் அளித்த வாக்கு மூலத்தில் கொல்லேகால் காட்டுப் பகுதியில் 4 பேரை காரில் அழைத்து வந்து சதித்திட்டம் தீட்டியதாக தெரிவித்தார். 4 பேரும் இந்தி பேசும் வாலிபர்கள் என்றும் தெரிவித்தார். அதன் பேரில் சிவமோகாவைச் சேர்ந்த நவீன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

இதற்கிடையே போலீஸ் தேடும் கொலையாளிகள் மராட்டிய மாநிலத்தில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் கர்நாடக சிறப்பு படை போலீசார் மும்பை மற்றும் மராட்டியத்தின் பல்வேறு இடங்களில் முகாமிட்டு தேடி வந்தனர்.

இந்த நிலையில் கவுரி லங்கேஷ் கொலை தொடர்பாக மராட்டிய வாலிபர் ஒருவர் சிக்கினார். அவருக்கு கொலையில் தொடர்பு உள்ளதா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

பிடிபட்ட வாலிபருக்கு 30 வயது இருக்கும். 5 அடி ஒரு அங்குலம் உயரமும், 75 முதல் 80 கிலோ எடையும் இருப்பார் என்று போலீசார் தெரிவித்தனர். அவரிடம் இருந்து துப்பாக்கி எதுவும் சிக்கவில்லை.

சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளுடன் மராட்டிய வாலிபரை ஒப்பிட்டுப் பார்த்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #GauriLankeshmurder

Tags:    

Similar News