செய்திகள்
ரிஷப் பண்ட்

பறிக்கப்பட்ட டெல்லி அணி கேப்டன் பொறுப்பு - என்ன சொல்கிறார் ஷ்ரேயாஸ் அய்யர்?

Published On 2021-09-24 00:43 GMT   |   Update On 2021-09-24 00:43 GMT
டெல்லி கேப்பிட்டல்ஸ் கேப்டனாக ரிஷப் பண்ட் நீடிக்க அணி நிர்வாகம் எடுத்த முடிவை மதிக்கிறேன் என முன்னாள் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் தெரிவித்தார்.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் துபாயில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் சன்ரைசர்சை துவம்சம் செய்து 7-வது வெற்றியை ருசித்து மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியது.

அதன்பின், தோள்பட்டை காயம் காரணமாக முதல் கட்ட போட்டியில் விளையாட முடியாமல் போனதால் கேப்டன் பதவியை இழந்த டெல்லி வீரர் ஷ்ரேயாஸ் அய்யர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

எனக்கு டெல்லி அணியின் கேப்டன் பதவி அளிக்கப்பட்ட போது நான் வித்தியாசமான மனநிலையில் இருந்தேன். முடிவு எடுப்பது மற்றும் மனப்பக்குவம் மிகவும் நன்றாக இருந்தது. இதன்மூலம் கடந்த 2 ஆண்டுகளில் நான் நிறைய பயனடைந்தேன். ரிஷப் பண்ட் கேப்டனாக தொடருவது என்பது அணி நிர்வாகம் எடுத்த கொள்கை முடிவாகும். நிர்வாகம் எடுத்த முடிவை நான் மதிக்கிறேன்.



ரிஷப் பண்ட் இந்த சீசன் தொடக்கத்தில் இருந்து அணியை சிறப்பாக வழிநடத்தி வருகிறார். இந்த சீசன் முடியும் வரை அவர் கேப்டனாக இருக்க வேண்டும் என்று அவர்கள் நினைத்தார்கள். அந்த முடிவை நான் முற்றிலும் மதிக்கிறேன். அதில் எனக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை.

நான் கேப்டனாக இருக்கையில் நெருக்கடியை எதிர்கொள்ள விரும்புவேன். நெருக்கடியும், சவாலும் அதிகமாக இருக்கும்போது, நான் சிறப்பாக செயல்படுவதாக நினைப்பேன். இந்த ஆட்டத்திலும் வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடிக்கு மத்தியில் தான் களம் புகுந்தேன். ஆடுகளம் சீரற்ற தன்மை கொண்டதாக இருந்தது. எப்போது களம் கண்டாலும் கடைசி வரை நிலைத்து நின்று வெற்றிகரமாக நிறைவு செய்ய வேண்டும் என்பதே எனது எண்ணமாகும். காயத்தில் இருந்து மீண்ட பிறகு முதல் ஆட்டத்திலேயே அணியின் வெற்றிக்கு பங்களிப்பு அளித்திருப்பது உற்சாகம் அளிக்கிறது என தெரிவித்தார்.
Tags:    

Similar News