செய்திகள்
காவலர் சுயதொழில் மையத்தை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் பார்வையிட்ட காட்சி.

சென்னையில் புத்தாண்டைபோல காணும் பொங்கலுக்கும் கட்டுப்பாடுகள்- போலீஸ் கமிஷனர் அறிவிப்பு

Published On 2021-01-08 20:49 GMT   |   Update On 2021-01-08 20:49 GMT
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதுபோல காணும் பொங்கல் கொண்டாட்டங்களுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்தார்.
சென்னை: 

சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் காவலர் சுய தொழில் மையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு 25 தையல் எந்திரங்களுடன் போலீஸ் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு தையல் பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் பிரிண்டிங் பயிற்சியும் கொடுக்கப்படுகிறது.

இந்த சுய தொழில் மையத்தை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நேற்று மாலை திறந்து வைத்து பேசினார். சுய தொழில் மையத்தை பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இந்த சுயதொழில் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் பைகளை காவலர் கூட்டுறவு கடைகள் மூலம் வாங்கி விற்பனை செய்யப்படும். பின்னர் வெளி ஆர்டர்களுக்கும் பைகள் தயாரித்து கொடுக்கப்படும். இது நல்ல முறையில் செயல்பட்டால், சென்னையில் பரங்கிமலை ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பு உள்ளிட்ட அனைத்து போலீஸ் குடியிருப்புகளிலும் இந்த சுயதொழில் மையம் தொடங்கப்படும்.

சென்னையில் மத்திய-மாநில அரசு நிதி உதவியுடன் மேலும் கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படும். அனைத்து கண்காணிப்பு கேமராக்களையும் இணைத்து மைய கட்டுப்பாட்டு அறை ஒன்றும் தொடங்கப்படும். கண்காணிப்பு கேமராக்களை சீரமைக்க அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. 10 நாட்களுக்கு ஒரு முறை கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்யப்படும்.

சென்னையில் அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக கொரோனா நோய் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால்தான் சென்னையில் அரசு அறிவுரையின்படி புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அது போன்ற கட்டுப்பாடுகள் காணும் பொங்கல் கொண்டாட்டங்களுக்கும் தொடரும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கமிஷனர் அமல்ராஜ், இணை கமிஷனர்கள் சுதாகர், மல்லிகா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News