ஆன்மிகம்
பாணனுக்காக அங்கம் வெட்டிய லீலை அலங்காரத்தில் சுந்தரேசுவரர் - பிரியாவிடை, மீனாட்சி அம்மன் அருள்பாலித்தனர்.

மதுரை ஆவணி மூலத்திருவிழா: சுந்தரேசுவரருக்கு இன்று பட்டாபிஷேகம்

Published On 2021-08-17 08:11 GMT   |   Update On 2021-08-17 08:11 GMT
மதுரை ஆவணி மூலத்திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக சுந்தரேசுவரருக்கு இன்று பட்டாபிஷேகம் நடக்கிறது. பாணனுக்காக சென்று அங்கம் வெட்டிய லீலை அலங்காரத்தில் இறைவன் காட்சி அளித்தார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடந்துவரும் ஆவணி மூலத்திருவிழாவில் நேற்று காலை பாணனுக்காக இறைவன் சென்று அங்கம் வெட்டிய லீலை அலங்கார நிகழ்ச்சி நடந்தது. அப்போது கம்பத்தடி மண்டபத்தில் இந்த அலங்காரத்தில் சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் காட்சி அளித்தனர். அங்கு சுந்தரேசுவரர் வேடம் அணிந்து கோவில் ஸ்தானிக பட்டர் ஹலாஸ் கையில் கேடயம், வாளுடன் லீலையை நடித்து காண்பித்தார். பின்னர் இரவு சுவாமி தங்க ரிஷப வாகனத்திலும், அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்திலும் எழுந்தருளி ஆடி வீதிகளில் வலம் வந்தனர்.

விழாவில் பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை குறித்த புராண வரலாறு வருமாறு:-

மதுரையை ஆண்ட குலோத்துங்க பாண்டியன் காலத்தில் பாணன் என்ற வயது முதிர்ந்த வாள்வித்தை ஆசிரியர் வாழ்ந்து வந்தார். அவருடைய சிஷ்யர்களில் சித்தன் என்பவன் தீய குணங்கள் கொண்டவன். பயிற்சி முடித்து சென்ற அவன் தானும் ஒரு பயிற்சி பள்ளியை அமைத்தான்.

அங்கு தனக்கு பாடம் கற்றுக்கொடுத்த ஆசிரியரின் மாணவர்களை எல்லாம் அங்கு அழைத்து கொண்டான். ஆசிரியர் மனைவியிடமும் தவறாக நடக்க முயன்றான். இதைக்கண்ட பாணன் சோமசுந்தரரிடம் முறையிட்டார்.

இறைவன் அந்த பாணன் வேடம் தாங்கி சென்று சித்தனை வாள்போருக்கு அழைத்தார். ஆசான் மனைவியை நினைத்த நெஞ்சையும், பேசிய நாக்கையும், அந்த பெண்ணை தொட்ட கைகளையும், கண்ட கண்களையும் காத்து கொள் என்று கூறி ஒவ்வொரு அங்கமாக வெட்டினார். இறுதியில் அவனது தலையையும் வெட்டினார், இறைவன்.

இந்த தகவலை அறிந்த குலோத்துங்க பாண்டியன் அந்த பாணனுக்கு தக்க மரியாதை செய்து கவுரவித்தார் என்று வரலாறு கூறுகிறது.

மேலும் ஆவணி மூலத்திருவிழாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு சிகர நிகழ்ச்சியாக சுந்தரேசுவரருக்கு பட்டாபிஷேகம் கோவிலில் சுவாமி சன்னதி ஆறுகால் பீடத்தில் நடக்கிறது. அதில் சுவாமியிடம் இருந்து செங்கோலை பெற்று அவரது பிரதிநிதியாக மீனாட்சி கோவில் தக்கார் கருமுத்து கண்ணன் சுவாமி சன்னதி 2-ம் பிரகாரத்தை வலம் வருவார். பின்னர் அந்த செங்கோலை சுவாமியின் திருக்கரத்தில் சமர்பிப்பார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
Tags:    

Similar News