செய்திகள்
அய்யனார் கோவில் மலைப்பகுதியில் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டில் இல்லாத தண்ணீர் தொட்டி.

வனப்பகுதியில் பயன்பாட்டுக்கு வராத தண்ணீர் தொட்டிகள்

Published On 2020-10-17 03:56 GMT   |   Update On 2020-10-17 03:56 GMT
கடமலைக்குண்டு அருகே வனப்பகுதியில் கட்டப்பட்ட தண்ணீர் தொட்டிகள் பயன்பாட்டுக்கு வராததால் வனவிலங்குகள் ஊருக்குள் புகும் சூழல் உள்ளது.
கடமலைக்குண்டு:

கண்டமனூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட அய்யனார் கோவில் மலைப்பகுதியில் மான் உள்ளிட்ட வனவிலங்குகள் ஏராளம் உள்ளன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால், தண்ணீரை தேடி மலையடிவாரத்தில் உள்ள தேனி-வருசநாடு சாலையை கடந்து மூலவைகை ஆறுக்கு வனவிலங்குகள் வருகின்றன. இதேபோல் அடிவாரத்தை ஒட்டியுள்ள தோட்டங்களுக்கும் அவை புகுந்து விடுகின்றன.

இவ்வாறு தண்ணீரை தேடி செல்லும் விலங்குகள், சாலையை கடக்கும் போது அடையாளம் தெரியாத வாகனங்களில் மோதி பலியாகும் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் வாகனங்கள் மோதி 20-க்கும் மேற்பட்ட மான்கள் இறந்துள்ளன. இதுபோன்ற சம்பவங்களை தடுக்க, அய்யனார்கோவில் மலைப்பகுதியில் மான்கள் தண்ணீர் குடித்து செல்ல தண்ணீர் தொட்டிகள் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இதைக்கருத்தில் கொண்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அய்யனார் கோவில் மலைப்பகுதியில் 3 இடங்களில் புதிதாக தண்ணீர் தொட்டிகள் கட்டப்பட்டன. மேலும் தொட்டிகளில் தண்ணீர் நிரப்புவதற்கு புதிய ஆழ்துளை கிணறும் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் தண்ணீர் தொட்டிகள் கட்டி முடிக்கப்பட்டு 2 மாதங்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில் தற்போது வரை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை. இதனால் குடிநீர் தேடி செல்லும் விலங்குகள், வாகனங்கள் மோதி பலியாகும் சம்பவம் தொடர்ந்து வருகிறது.

இதற்கிடையே இரவு நேரத்தில் சிலர், நீர் நிரப்பப்படாத தண்ணீர் தொட்டிகளை மது குடிக்கும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட வனத்துறையினர் அய்யனார்கோவில் மலைப்பகுதியில் கட்டப்பட்ட 3 குடிநீர் தொட்டிகளையும் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Tags:    

Similar News