ஆன்மிகம்
வெள்ளிக்கிடா வாகனத்தில் வீரபாகு வந்த காட்சியை படத்தில் காணலாம்.

பழனி கோவிலில் சூரர்களை வதம் செய்த முருகப்பெருமான்

Published On 2021-11-10 05:06 GMT   |   Update On 2021-11-10 05:06 GMT
பழனி முருகன் கோவிலில் கந்தசஷ்டியையொட்டி பக்தி பரவசத்துடன் சூரசம்ஹாரம் நேற்று நடந்தது. இதில், சூரர்களை முருகப்பெருமான் வதம் செய்தார். திருக்கல்யாணம் இன்று (புதன்கிழமை) நடைபெறுகிறது.
தமிழ் கடவுளான முருகப்பெருமான், தேவர்களை காப்பதற்காக சூரர்களுடன் போர் புரிந்த நிகழ்வு ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அதன்படி 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 4-ந்தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று மாலை 6 மணிக்கு கிரிவீதிகளில் நடந்தது. முன்னதாக நேற்று பகல் 11.30 மணிக்கு மலைக்கோவிலில் தங்க சப்பரத்தில் எழுந்தருளிய சின்னக்குமாரருக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து மலைக்கொழுந்து அம்மன் சன்னதியில், சக்திவேல் வைக்கப்பட்டது. அங்கு சிறப்பு பூஜை, தீபாராதனைக்கு பிறகு அம்மனிடம் இருந்து வேல் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் கோவில் நடை அடைக்கப்பட்டது.

அதன்பிறகு சூரனை வதம் செய்வதற்காக வில்-அம்பு, கேடயத்துடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளிய சின்னக்குமாரர் மலைக்கோவிலில் இருந்து புறப்பட்டார். அவருடன் வீரபாகு, நவவீரர்கள் ஆகியோரும் புறப்பட்டனர்.

பின்னர் சூரபத்மன், முருகப்பெருமானுடன் போர் புரியும் வகையில் புறப்பட்டு வடக்கு கிரிவீதி அடைதல் நிகழ்ச்சி நடந்தது. இதேபோல் பெரியநாயகி அம்மன் கோவிலில் இருந்து முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் வெள்ளி பிடாரி மயில்வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி பாதவிநாயகர் கோவில் மண்டபத்தில் நடந்தது.

முன்னதாக பெரியநாயகி அம்மன் கோவிலில் இருந்து சூரர்கள் தாரகாசூரன், பானுகோபன், சூரபத்மன், சிங்கமுகன் ஆகியோர் நான்குரத வீதிகளில் போர் முரசு கொட்டியபடி அடிவாரம் வந்தடைந்தனர்.

இதைத்தொடர்ந்து தங்க சப்பரத்தில் பராசக்தி வேலுடன் புறப்பட்ட சின்னக்குமாரர், மாலை 5.30 மணிக்கு பாதவிநாயகர் கோவிலை வந்தடைந்தார். பின்னர் வில்-அம்பு, கேடயத்துடன் பெரிய தங்கமயில் வாகனத்தில் சின்னக்குமாரர் எழுந்தருளினார்.

அதையடுத்து திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி சன்னதிக்கு பராசக்திவேல் கொண்டு செல்லப்பட்டு அங்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது.

பின்னர் கோவில் பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், செல்வசுப்பிரமணியம் மற்றும் ஓதுவார்கள் பராசக்தி வேல், குத்தீட்டி உள்ளிட்ட ஆயுதங்களை சின்னக்குமாரரிடம் வைத்து வழிபாடு நடத்தினர்.

சின்னக்குமாரருடன் வெள்ளி ஆட்டுக்கிடா வாகனத்தில் வீரபாகு மற்றும் நவவீரர்கள் போருக்கு புறப்பட்டனர். பின்னர் மாலை 6 மணிக்கு வடக்கு கிரிவீதியில் தாரகாசூரன் வதம் நடந்தது.

முன்னதாக கோவில் ஓதுவார்கள், கந்தபுராணம் பாடி தாரகாசூரனுக்கு முருகனின் பெருமையை எடுத்து கூறும் நிகழ்ச்சியும், நவவீரர்களுடன் வீரபாகு சென்று சமாதானம் பேசும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

ஆனால் அறிவுரையை ஏற்காத தாரகாசூரன் முருகனை போருக்கு அழைத்தார். இதைத்தொடர்ந்து பெரிய தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளிய சின்னக்குமாரரிடம் பராசக்தி வேலை பெற்ற கோவில் குருக்கள் பக்தி பரவசத்துடன் தாரகாசூரனை வதம் செய்து சூரசம்ஹார நிகழ்ச்சியை நடத்தினர்.

இதேபோல் கிழக்கு கிரிவீதியில் பானுகோபன், தெற்கு கிரிவீதியில் சிங்கமுகன், மேற்கு கிரிவீதியில் சூரபத்மன் ஆகியோரை முருகப்பெருமான் வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதையடுத்து இந்திர வாகனத்தில் முத்துக்குமாரசுவாமியுடன், சின்னக்குமாரர் சந்திக்கும் நிகழ்ச்சியும், ஆரியர் மண்டபத்தில் வெற்றிவிழாவும் நடந்தது. பின்னர் சக்திவேலுடன் சின்னக்குமாரர் மலைக்கோவிலுக்கு சென்றார். அங்கு சம்ரோட்சன பூஜைக்கு பிறகு கோவில் நடை திறக்கப்பட்டு ராக்கால பூஜை நடைபெற்றது.

வழக்கமாக பழனி முருகன் கோவிலில் நடைபெறுகிற சூரசம்ஹார நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் வருகை தருவர்.

இதேபோல் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் இருந்தும் பக்தர்கள் பழனிக்கு வருவர். இதனால் சூரசம்ஹார நிகழ்ச்சியை காண பழனி கிரிவீதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

ஆனால் இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சூரசம்ஹார நிகழ்ச்சியில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி மறுத்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்தது. இதன் காரணமாக நேற்று நடந்த சூரசம்ஹார நிகழ்ச்சியின் போது கிரிவீதிகள் களை இழந்து காணப்பட்டது.

இருப்பினும் சில இடங்களில் பக்தர்கள் திரண்டிருந்து சூரசம்ஹார நிகழ்ச்சியை பக்தி பரவசத்துடன் கண்டுகளித்தனர். இரவு 8 மணிக்கு சூரசம்ஹார நிகழ்ச்சி முடிவடைந்தது.

இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் விசாகன், டி.ஐ.ஜி. விஜயகுமாரி, போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், கோவில் இணை ஆணையர் நடராஜன், உதவி ஆணையர் செந்தில்குமார், போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) ரவிச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

விழாவின் 7-ம் திருநாளான இன்று (புதன்கிழமை) மலைக்கோவிலில் காலை 8 மணிக்கு சண்முகர், வள்ளி-தெய்வானை திருக்கல்யாணமும், தொடர்ந்து திருமண விருந்தும் நடைபெறுகிறது.

பின்னர் இரவு 7 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு திருக்கல்யாணமும், இரவில் முத்துக்குமாரசுவாமி தங்கக்குதிரை வாகனத்தில் புறப்பாடும் நடைபெறுகிறது.
Tags:    

Similar News