லைஃப்ஸ்டைல்
பிள்ளைகளின் நினைவாற்றலும், மனப்பாடம் செய்தலும் ...

பிள்ளைகளின் நினைவாற்றலும், மனப்பாடம் செய்தலும் ...

Published On 2021-02-06 07:25 GMT   |   Update On 2021-02-06 07:25 GMT
பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் எத்தனையோ மாணவர்கள் விசயத்தை புரிந்து கொள்ளாமலேயே மனப்பாடம் செய்து கலையில் வல்லவர்களாக இருக்கிறார்கள்.
பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் எத்தனையோ மாணவர்கள் விசயத்தை புரிந்து கொள்ளாமலேயே மனப்பாடம் செய்து கலையில் வல்லவர்களாக இருக்கிறார்கள். விசயத்தை புரிந்து கொள்வது என்பது வேறு, புரியாமல் மனப்பாடம் செய்வது வேறு. மனப்பாடம் செய்கிற விசயங்கள் நினைவில் நீடித்து நிற்பதில்லை. காரியம் முடிந்தவுடன் மறந்து போய் விடுகிறது. இதற்கு காரணம், நினைவில் வைத்துக் கொண்ட ஒரு விசயத்தை ஏற்கனவே மூளையில் உள்ள எதனுடனும் இணைத்து பார்க்காமல் நினைவில் வைத்துக் கொள்ள முயற்சி செய்வதன் விளைவாகும். கண்மூடித்தனமாக மனப்பாடம் செய்யும் விசயங்கள் நீண்டநேரம் மனதில் நிலைத்திருப்பதில்லை.

இதை பீரங்கியில் போடும் வெடி மருந்துக்கு ஒப்பிடப்பிடலாம். பீரங்கி வெடித்தவுடன் அத்தனை மருந்தும் எரிந்து தீர்ந்து போய் விடும். மறுபடியும் வெடிக்க வேண்டுமென்றால் புதிதாகத்தான் மருந்து போட வேண்டும். அதுபோலவே, மனப்பாடம் செய்யும் விசயங்கள் எதற்காக செய்யப்படனவோ அந்த நோக்கம் முடிந்தவுடன், மறக்கப்பட்டு விடுகின்றன. மீண்டும் பயன்படுத்த வேண்டுமென்றால், மறுபடியும் மனப்பாடம் செய்ய வேண்டியிருக்கிறது. பரீட்சைக்கு மனப்பாடம் செய்வது இந்த கதைதான். பரீட்சை முடிந்தவுடன் அவை மறக்கப்பட்டு விடுகின்றன.

மனப்பாடம் செய்வதற்கு சுலபமான வழி ஒன்றை திரும்ப, திரும்ப படிப்பதாகும். ஒரே மூச்சில் திரும்ப, திரும்ப படிப்பதன் மூலம் மனதில் நிறுத்திக் கொள்வது சாத்தியமாக இருக்கலாம். ஆனால், அது நெடுநேரம் நிலைப்பதில்லை. அப்படி செய்யாமல் இடைவெளி விட்டு திரும்ப, திரும்ப படித்தால் அது நினைவில் நிற்பதோடு மட்டுமின்றி நீண்ட காலத்துக்கும் நினைவில் நிற்கிறது.

அதேபோல, நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய முழு விசயத்தையும் ஒரேடியாக மனதில் ஏற்றிக் கொள்ளாமல், சிறிது சிறிதாக அவகாசம் எடுத்துக் கொண்டு மனப்பாடம் செய்கிறபோது முழு விசயமும் மனதில் நிற்பதோடு மட்டுமின்றி நீண்ட காலத்துக்கும் பயன்படுகிற வகையில், நிலைத்து விடுகிறது. கல்வி என்பது பொதுவாக கற்றுக் கொள்ளும் முறைதான். ஒரு விசயத்தை மனப்பாடம் செய்வது மட்டுமே கல்வியாகி விடாது.

நீங்கள் கற்றுக் கொள்ளாத எதையும் நினைவில் வைத்துக் கொள்வது சாத்தியமில்லை. ஆகவே, உங்களுக்கு தேவையான நேரத்தை எடுத்துக் கொண்டு மெதுவாக படிப்பதில் தவறில்லை. ஆனால், கற்றவை மனதில் படிய வேண்டுமானால் அதற்கு அவகாசம் தேவை என்பதையும் மறந்து விடாதீர்கள். கற்றவற்றை திரும்பதிரும்ப நினைவு படுத்தி பார்த்து கொள்வது அவசியம். எதை, எதை மனதில் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நீங்கள் விரும்புகின்றீர்களா அதைஅதை அவ்வப்போது நினைவிற்கு கொண்டு வர முயலுங்கள்.

சச.துர்காதேவி, பி.எஸ்சி.வேதியியல் (இரண்டாம் ஆண்டு), மதர் தெரசா கலை அறிவியல் கல்லூரி, இலுப்பூர், புதுக்கோட்டை.
Tags:    

Similar News