ஆன்மிகம்
செவ்வாய் தோஷத்திற்கு பொருத்தம் பார்ப்பது

செவ்வாய் தோஷத்திற்கு பொருத்தம் பார்ப்பது எப்படி?

Published On 2021-11-02 07:22 GMT   |   Update On 2021-11-02 07:22 GMT
ஆணுக்கும், பெண்ணுக்கும் ஏழு அல்லது எட்டில் செவ்வாய் இருக்கும்போது அவை சம தோஷமுள்ள ஜாதகமாக எடுத்துக் கொள்ளப்பட்டு இரண்டையும் இணைக்கலாம்.
செவ்வாய் தோஷத்திலும் சில அளவீடுகள் உள்ளன. ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்திற்கோ, ராசிக்கோ ஏழு மற்றும் எட்டாம் இடங்களில் செவ்வாய் இருப்பது முழு தோஷமாகும். இரண்டாம் வீட்டில் இருப்பது அதற்கடுத்த கடுமையான அமைப்பாகவும், பனிரெண்டாமிடம் அடுத்தும் இறுதியாக நான்காமிடம் குறைவான தோஷம் உள்ளதாகவும் கணக்கிடப்படுகின்றன.

இந்நிலையில் ஆணுக்கும், பெண்ணுக்கும் ஏழு அல்லது எட்டில் செவ்வாய் இருக்கும்போது அவை சம தோஷமுள்ள ஜாதகமாக எடுத்துக் கொள்ளப்பட்டு இரண்டையும் இணைக்கலாம்.

அடுத்து ஒருவரின் லக்னத்திற்கு ஏழு, எட்டில் உள்ள செவ்வாயை அடுத்தவரின் ராசிக்கு ஏழு, எட்டில் இருக்கும் செவ்வாயுடன் இணைத்துப் பொருத்தலாம். இதுவும் சம தோஷமாகக் கருதப்பட்டு இருவரும் நல்வாழ்க்கை வாழ துணை புரியும்.

அதேபோல ஒருவரின் ஜாதகத்தில் இரண்டிலுள்ள செவ்வாயை ஏழு, எட்டில் உள்ள மற்றவரின் ஜாதகத்துடன் பொருத்துவது சில நிலைகளில் சரிதான் என்றாலும் நான்கு, பனிரெண்டாமிடங்களில் செவ்வாய் இருக்கும் குறைந்த அளவு தோஷமுள்ள ஜாதகத்தை கடுமையான ஏழு, எட்டாமிட செவ்வாயுடன் இணைப்பது தவறு.

இன்னும் ஒரு நுணுக்கமாக ஒருவருக்கு இரண்டாமிடத்தில் செவ்வாய் அடுத்தவருக்கு இரண்டாமிடத்தில் சனி என்பது மிக நல்ல பொருத்தம்தான். இருவருக்குமே குடும்ப ஸ்தானம் எனப்படும் இரண்டாமிடத்தில் பாபக் கிரகம் இருப்பதால் சம தோஷமாகி கெடுதல் வர வாய்ப்பில்லை. ஆனால் இருவரில் ஒருவருக்கு ஒரு கிரகம் சுபத்துவம் அடைந்திருந்தால் பொருத்தக் கூடாது. கிரக பாப, சுபவலுக்கள் இருவருக்கும் சமமாக இருக்க வேண்டும்.

இந்த விதி ஏழு, எட்டாமிடங்களுக்கும் சரி வரும். ஒருவருக்கு ஏழில் சனி இன்னொருவருக்கு ஏழில் செவ்வாய் என்பது தீமை தராத பொருத்தமே. அதுபோலவே ஒருவரின் எட்டில் செவ்வாய் இன்னொருவருக்கு எட்டிலோ இரண்டிலோ சனி என்பதும் இணைக்க வேண்டிய ஜாதகம்தான்.

மொத்தத்தில் செவ்வாய் தோஷத்தை கணக்கிடும்போது சனியும் அந்த ஜாதகத்தில் எந்த நிலையில் இருக்கிறார் என்பதை தெரிந்து கொண்டீர்களானால் குழப்பம் எதுவுமில்லாமல் பொருத்தம் பார்க்கவோ, பலன் சொல்லவோ துல்லியமாகக் கை கொடுக்கும்.
Tags:    

Similar News