செய்திகள்
கொரோனா கட்டுப்பாடு விதிகளில் தளர்வு

கொரோனா கட்டுப்பாடு விதிகளில் தளர்வு: கர்நாடக அரசு அறிவிப்பு

Published On 2020-10-15 01:44 GMT   |   Update On 2020-10-15 01:44 GMT
அரசியல், ஆன்மிகம் உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளில் இன்று (வியாழக்கிழமை) முதல் முகக்கவசம் அணிந்து 100 பேருக்கு மேல் கலந்து கொள்ளலாம் என்று கொரோனா கட்டுப்பாடு விதிகளில் கர்நாடக அரசு தளர்வுகளை அறிவித்து உள்ளது.
பெங்களூரு :

கர்நாடகத்தில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.

பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. கர்நாடக அரசு கடந்த 1-ந் தேதி பிறப்பித்த உத்தரவில், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஊரடங்கு வருகிற 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் 15-ந் தேதி (அதாவது இன்று) முதல் திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே போல் அரசியல், ஆன்மிக மற்றும் சமூக நிகழ்ச்சிகளில் 100 பேருக்கு மேல் பங்கேற்கலாம் என்று கூறியது. இது தொடர்பாக கர்நாடக அரசின் தலைமை செயலாளர் விஜயபாஸ்கர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தில் அரசியல், ஆன்மிகம், சமூக நிகழ்ச்சிகளில் இன்று (வியாழக்கிழமை) முதல் 100 பேருக்கு மேல் பங்கேற்க அனுமதி அளிக்கப்படுகிறது. அதே நேரத்தில் அதில் கலந்து கொள்கிறவர்கள், முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், சானிடைசர் கொண்டு கைகளை தூய்மைபடுத்த வேண்டும். கொரோனாவை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் வைரஸ் பரவல் மட்டும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்த வைரஸ் மேலும் அதிகரிப்பதை தடுக்க அதன் சங்கிலித்தொடரை உடைக்க வேண்டியது அவசியம். அந்த பணிகளை அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே தசரா விழா வருகிற 17-ந் தேதி தொடங்குகிறது. வழக்கமாக இந்த விழா சிறப்பான முறையில் நடத்தப்படும். கொரோனா பரவல் காரணமாக இந்த விழாவை எளிமையாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் தசரா விழாவை எளிமையாக கொண்டாட வேண்டும் என்று நான் உத்தரவிடுகிறேன்.

மைசூரு தவிர மாநிலத்தின் மற்ற பகுதிகளில் நடைபெறும் தசரா விழாக்களில் 100 பேருக்கு மேல் கலந்து கொள்ளக்கூடாது. மைசூரு தசரா விழாவையொட்டி அரண்மனையில் நடைபெறும் கலாசார நிகழ்ச்சிகளில் சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அனைவரும் முகக்கவசம் அணிவதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். இந்த மைசூரு தசரா விழா நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். இதை பொதுமக்கள் கண்டுகளிக்கலாம். இந்த நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் நேரடியாக கலந்துகொள்ள அனுமதி இல்லை.

வருகிற 17-ந் தேதி மைசூரு சாமுண்டி மலையில் நடைபெறும் தசரா விழா தொடக்க நிகழ்ச்சியில் அதிகபட்சமாக 200 பேர் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும். அதே நாள் அரண்மனையில் நடைபெறும் கலாசார நிகழ்ச்சி அன்று தொடங்கி தொடர்ந்து 8 நாட்கள் நடக்கிறது. இதில் அங்கு தினமும் 2 மணி நேரம் 50 பேர் மட்டுமே கலந்துகொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. அதே நாளில் இருந்து 10 நாட்களுக்கு இரவு 7 மணி முதல் 9 மணி வரை மின்விளக்கு அலங்காரம் அனுமதிக்கப்படுகிறது. 26-ந் தேதி அரண்மனையில் ஜம்பு சவாரி ஊர்வலம் நடைபெறும். இதில் அதிகபட்சமாக 300 பேர் வரை பங்கேற்க அனுமதி வழங்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கும் அதிகாரிகள், ஊழியர்கள், கலைஞர்கள், ஊடகத்தினர் 14-ந் தேதிக்கு பிறகு கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இதில் வைரஸ் தொற்று பாதிப்பு இல்லை என்று சான்று உள்ளவர்கள் மட்டுமே நிகழ்ச்சிகளில் அனுமதிக்கப்படுவார்கள்.

இவ்வாறு விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News