செய்திகள்
கண்ணதாசன்

கண்ணதாசனின் மறுபக்கம்: கவியரசரோடு நிகழ்ந்த முதல் சந்திப்பு

Published On 2021-10-25 11:16 GMT   |   Update On 2021-10-25 11:16 GMT
கவியரசர் கண்ணதாசனைப் பற்றி முனைவர் கவிஞர் இரவிபாரதி ‘மாலைமலர்’ வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
கவியரசர் கண்ணதாசனைப் பற்றி ஒரு தொடர் எழுதப் போகிறோம் என்ற எண்ணமே கரும்பாய் இனித்தது.

‘‘கண்ணதாசனின் மறுபக்கம்’’ என்ற தலைப்பிலே மாலை மலரில் அண்மையில் நான் எழுதிய கட்டுரைக்கு கிடைத்த மாபெரும் வரவேற்பபையொட்டி கிடைத்த அரிய வாய்ப்பு இது. எனது நீண்டநாள் கனவும் இதுவே.

எப்படித் தொடங்குவது? எங்கே இருந்து தொடங்குவது? என்று சிந்தித்தபோது, எனது பள்ளிக்கால நிகழ்வு ஒன்று கண்சிமிட்டி கண்முன்னே தோன்றியது.

எனது சொந்த ஊரான கண்டரமாணிக்கம் தண்டாயுத பாணி பள்ளியில் அப்போது எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். பள்ளியின் ஆண்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக, தமிழறிஞர் டாக்டர் மெ.சுந்தரம் அவர்கள் வருகை புரிந்திருந்தார். அவருடைய பேச்சின் பெரும்பகுதி கண்ணதாசனைப் பற்றியே இருந்தது. பாகப்பிரிவினை, பாவமன்னிப்பு, பாசமலர், பாலும் பழமும் போன்ற சிவாஜியின் படங்களும், நாடோடி மன்னன், மன்னாதி மன்னன், மகாதேவி போன்ற எம்.ஜி.ஆரின் படங்களும் மாபெரும் வெற்றி பெற்றது. அந்த வெற்றிக்கு கண்ணதாசனின் கருத்துள்ள பாடல்களே முக்கிய காரணம் என்ற வகையிலே அவருடைய பேச்சு அமைந்திருந்தது.

‘‘மாணவச் செல்வங்களாகிய நீங்களும் பள்ளிப் பாடங்களோடு நின்று விடாமல் கவிஞராகவும், அறிஞராகவும், கண்ணதாசனைப் போல வளரவேண்டும் என வாழ்த்துரை வழங்கிவிட்டு, கண்ணதாசன் சாதாரண கவிஞர் அல்ல, இருபதாம் நூற்றாண்டின் மறுமலர்ச்சிக் கவிஞர் என்பதை நினைவிலே நிறுத்துங்கள்’’ என்று பேசி, பலத்த கைதட்டல்களை வாங்கிக் கொண்டு புறப்பட்டு போனார், டாக்டர் மெ.சுந்தரம் அவர்கள்.

அவர் புறப்பட்டு போன பின்னர் அன்று அவர் பேசிய பேச்சு எனது காதுகளிலே மீண்டும் ஒலித்துக் கொண்டிருந்தது. (இன்றைக்கும் அது ஒலித்துக் கொண்டிருக்கிறது) அது எனது வாழ்க்கை பயணத்தில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திய பேச்சு என்பது மறுக்க முடியாத உண்மையாகும். அன்றிலிருந்து எனது போக்கிலும், நோக்கிலும் ஒரு மாறுதல் இருப்பதை என்னாலே உணர முடிந்தது.

அப்போதெல்லாம் வசதி படைத்தவர்கள் வீட்டில் மட்டும்தான் வானொலிப் பெட்டி இருந்தது. எங்கள் வீட்டில் அது இல்லாததால் பக்கத்து வீட்டு ஜன்னலோரம் நின்று இலங்கை வானொலியில் ஒலிபரப்பப்படும் பாடல்களை கேட்டு ரசிப்பது எனக்கு வாடிக்கையாகிவிட்டது. எங்கெல்லாம் ஒலிபெருக்கியில் பாடல்கள் ஒலிக்கிறதோ அங்கெல்லாம் கண்ணதாசன் பாடல்களை நின்று கேட்டு விட்டுப் போவதும் எனக்கு வழக்கமாகிவிட்டது. மாண வர்கள் பாடப் புத்தகங் களோடு நின்று விடாமல் இலக்கியங்களையும் கற்று உயர வேண்டும் என்று அன்று மெ.சுந்தரம் அவர்கள் பேசிய பேச்சின் விளைவு நூல் நிலையங்களை நோக்கி எனது கால்கள் நடக்க ஆரம்பித்தன. அப்பா அடிக்கடி வாங்கி வரும் ஏடுகளிலும் இதழ் களிலும் கண்ணதாசனைத் தேடுவேன். அவருடைய கவிதை இருந்தால் ஒரு வரிவிடாமல் அனைத்தையும் படிப்பேன். இதைத் தொடர்ந்து படிப்படியாக கண்ணதாசனைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் வளர்ந்து, மலர்ந்து, விசுவரூபம் எடுத்து நின்றது. விளைவு ‘‘சென்னைக்கு அழைத்துச் செல்லுங்கள்’’ என்று அப்பாவை நச்சரிக்கத் தொடங்கினேன்.

தமிழ்ப்பற்றும், இலக்கிய ஆர்வமும் நிறைந்த எனது தந்தையார் மறுப்பு ஏதும் சொல்லவில்லை. ‘‘விரைவில் சென்னைக்கு அழைத்துச் சென்று உனது விருப்பப்படி முதல்வர் காமராஜரையும், கவிஞர் கண்ணதாசனையும் காட்டுகிறேன்’’ என்று சொல்லி, அதன்படியே என் கல்லூரி படிப்புக்கு சென்னைக்கு அழைத்து வந்துவிட்டார்கள். நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அப்பா பழுத்த காங்கிரஸ் காரர். எப்போதும் மடிப்பு கலையாத கதர் சட்டையோடு காட்சி தருவார்.

எனவே முதலில் முதல்வராக இருந்த காமராஜர் வீட்டுக்கு என்னை அழைத்துச் சென்றார். எங்கும் காண முடியாத எளிமையோடு இருந்த காமராஜரை எளிதாக சந்தித்து விட்டோம். ஆனால் அடுத்த நாள் கண்ணதாசன் வீட்டுக்கு சென்ற போது, அங்கு அணிவகுத்து நின்ற கார்களின் எண்ணிக்கையும், காத்திருந்தோர் எண்ணிக்கையும் அத்தனை எளிதாக அவரை சந்தித்து விட முடியாது என்பதை சூசகமாக உணர்த்தியது. பல முறை படையெடுத்தும் கவிஞரை பார்க்க முடியவில்லை. பொறுமை இழக்காமல் போவதும் வருவதுமாக இருந்து கொண்டிருந்தேன்.

அப்போது, ஒரு நாள் நான் எழுதிய சில கவிதைகளை எடுத்துக் கொண்டு போய் பெருந்தலைவர் காமராஜரிடம் காட்டிவிட்டு ஐயாவிடம், ‘‘ஒரு விண்ணப்பம்’’ என்றேன். மெதுவாக, ‘என்ன?’ என்றார். ‘‘கண்ண தாசனைப் பார்க்கப் போனேன் முடியவில்லை’’ என்று இழுத்தேன். ‘‘அவரைப் பார்க்கணும் அவ்வளவுதானே? ஆகட்டும் பார்க்கலாம். இப்போ புறப்படு’’ என்று சொல்லி முடிப்பதற்குள், காரில் இருந்து இறங்கியபடி பெருந்தலைவரை பார்க்க கண்ணதாசன் வந்து கொண்டிருந்தார். அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போனேன். ‘‘இந்த தம்பி உங்க ஆளு, உங்களை பார்க்கணுமாம்’’ என்று பெருந்தன்மையோடு அறிமுகப்படுத்தி வைத்தார் பெருந்தலைவர்.

‘‘அதுக்கென்ன பார்த்தாப் போச்சு. நாளைக்கு காலையிலே வீட்டுக்கு வாங்க’’ என்றார் கவியரசர். நடப்பது கனவா... நிஜமா என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டு, ஆனந்த வெள்ளத்தில் மிதந்தபடி கிளம்பினேன்.
எப்போது விடியும் எனக் காத்திருந்து, அடுத்த நாள் அதிகாலையிலே கவிஞர் வீட்டு வாசலிலே நின்றேன். கவிஞர் வரச் சொல்லி இருக்கிற விவரத்தை உதவியாளரிடம் சொன்னேன். ‘‘நேற்று பெருந்தலைவர் வீட்டுக்கு வந்திருந்த தம்பியா? உட்காருங்கள் கவிஞரைப் பார்க் கலாம்’’ என்று அங்குள்ள நாற்காலியில் அமர வைத்தார் உதவியாளர்.
சிறிது நேரத்தில் பட்டுவேட்டி சட்டையோடு பளிச்சென்று வெளியே வந்தார் கண்ணதாசன். கம்பீரமான தோற்றத்தில் அவரைக் காணுவதே கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. எனக்குத்தான் வியர்த்துக் கொட்டியது. ‘‘ஒண்ணும் பயப்படாதீங்க’’. நான் கைகளிலே வைத்திருந்த கவிதைகளைப் பார்த்த கவிஞர், ‘‘அதைக் கொண்டாங்க’’ என்று அவரே வாங்கி படிக்க ஆரம்பித்தார்.
‘‘இல்லாளும் தனக்கென்று இல்லான்
ஏழையர்க்கு கைகொடுக்கும் நல்லான்
கல்லாமை கறுவறுத்த வல்லான்
கடுகளவும் நேர்மை தவறிச் செல்லான்’’ என்று  காமராஜரைப் பற்றி எழுதிய கவிதையும்,
‘‘மண்ணில் எத்தனை கவிஞர் இருப்பினும்
மறக்க முடியாத கவிஞன்...
எண்ணில் அடங்கா கவிதை பாடல்களை

எழுதிக் குவித்த கவிஞன்’’ என்று அவரைப் பற்றி எழுதிய பாடல்களையும் படித்துவிட்டு, ‘‘ரொம்ப, ரொம்ப நல்லாயிருக்கு. எதுகை மோனையோடு இருக்கு. இலக்கணத்தோடு இருக்கு, எனது வாழ்த்துக்கள்’’ என்று தட்டிக் கொடுத்ததோடு, ‘‘கண்ணப்பா இவருடைய முகவரியை வாங்கிக்க’’ என்று சொல்லிவிட்டு கம்போஸிங் இருக்கு என்று சொல்லிவிட்டு காரிலே கிளம்பிவிட்டார். அவரது பாராட்டு வானத்து தேவர்கள் பூமாரி பொழிந்தது போல் இருந்தது. இன்ப அதிர்ச்சியில் உறைந்து, மெய் மறந்து, அவருடைய கார் போன திசையையே பார்த்துக் கொண்டு நின்றேன். எனது கண்களில் ஆனந்தக் கண்ணீர் வெள்ளமாய் பெருகியதை உணர்ந்தேன்.
இப்படித்தான் கவிஞரோடு முதல் சந்திப்பு நிகழ்ந்தது. பெருந்தலைவர் செய்து வைத்த அறிமுகத்தினால் பெருமைக்குரிய தொடர்பாக அது அமைந்தது.

முன்னைக் காட்டிலும், கவிஞரை நேசிப் பதிலும் கவிஞர் எழுத்துக்களை வாசிப்பதிலும் முனைப்புக்காட்டினேன்.
அவரது கவிதைகள் எனக்கு மனப்பாடமாயின, உரைநடை எழுத்துக்கள் உற்சாகமாக உலா வந்தன.. திரைப்படப்பாடல்கள் மனதுக் குள் ரீங்கார மிட்டன. கவிஞர் பேசுகிற கூட்டங்களை நோக்கி கால்கள் நடந்தன. இப்படி ஒவ்வொரு நாள் வாழ்க்கையும் ஓடியது.உற் சாகத்தில் மனம் பாடியது.

பாரதிக்கு ஒரு பரம்பரை அமைந்தது போல பாவேந்தர்க்கு சீடர்கள் அமைந்தது போல, கண்ணதாசனுக்கும் நாடெங்கும் பற்றாளர்கள் உருவாகினார்கள். பஞ்சு அரு ணாசலம், பழ.நெடுமாறன், பேராசிரியை சரஸ்வதி  ராமநாதன், வலம்புரிஜான், தமிழருவி மணியன், இலக்கியச்சுடர்  ராமலிங்கம், கவிஞர் மா.கண்ணப்பன், கவிஞர் சொ.சொ.மீ. சுந்தரம், அரு.நாகப்பன், சோம. சிவப்பிரகாசம், டாக்டர் சுந்தரம், கவிஞர் தமிழ்புத்தன் போன்றவர்களோடு எனக்கும் அந்த வரிசையில் ஒரு இடம் கிடைத்தது அப்போது “ பொன்னருவி” என்பது தான் எனது பெயராக இருந்தது.

கவிஞரின் கவிதைகளை ஓசை நயத்தோடு சொல்லுகிற பாங்கு எனக்கு கை வந் திருந்ததால், அவரைச் சந்திக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம், ஏதாவது ஒரு கவிதையைச் சொல்லி அதைப்பாடு, இதைப்பாடு என்று சொல்லுவார். நானும் அவர் எதிர்பார்க்கும் சந்தத் தோடு சொல்லுவேன். அவர்  மிகவும் மகிழ்ந்து போவார். அது மட்டுமல்லாமல் ஒரு சில கவிதைகளில் மாத்திரை குறைந்திருந்தாலும், கூடியிருந்தாலும் அதை  நான் சுட்டிக்காட்டுகிற பொழுது அதை அளபெடையாக வைத்துக் கொள் எல்லாம் சரியாகி விடும் என்று சொல்லிச்சிரிப்பார்.

இப்படி, நுணுக்கமாக கவிதைக்குள்ளே ஊடுருவிப் பார்க்கும் திறமை உனக்கு வாய்த்திருப்பதால், எதிர்காலத்தில் கவிதை உலகில் மாபெரும் வெற்றி பெறுவாய் என்றும் வாயார வாழ்த்தினார். திரை உலகிலும், இலக்கிய உலகிலும் உனக்கு ஒரு இடம் இருக்கிறது என பாராட்டி மகிழ்ந்தார்.

அவர் பாராட்டியது போல, இலக்கிய உலகில் எனக்கு  ஒரு  இடம் கிடைத்திருப்பதாகவே உணர்கிறேன். திரை உலகில் அதிகமான பாடல்களை நான் எழுதா விட்டாலும், நான் எழுதிய பாடல்கள் அனைத்தும் முன் வரிசைப் பாடல்களாக அமைந்து விட்டன. குறிப் பாகச்சொல்ல வேண்டு மென்றால் மறுபடியும் என்ற படத்தில் பாலு மகேந்திரா இயக்கத்தில், இளையராஜா இசையில் எழுதிய “ஆசை அதிகம் வச்சு மனசை அடக்கி வைக்கலாமா... ஏ மாமா”

என்ற பாடல் இருபத்தி ஏழு ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் முன்னணி பாடலாக ஒலித்துக்கொண்டிருக்கிறது.
இந்தப்பாடலில் ஒரு  சிறப்பு என்னவென்றால், பாடலைக் கவிதை போல் எழுதியிருப்பேன்.. இயக்குனர் பாலுமகேந்திரா ஒரு கவிதை ரசிகராக இருந்ததால் நான் எழுதிக் கொடுத்ததில் ஒருவரி கூட மாற்றாமல் பதிவு செய்து எனக்குப் புகழ் சேர்த்துக் கொடுத்தார். இந்த உத்தியெல்லாம் கவியரசரிடம் இருந்து நான் கற்றுக்கொண்டது தான். வசனங்களையே கவிதையாக, எழுதுகிற ஆற்றல் நிறைந்தவரல்லவா கவியரசர்..

எனக்கிருக்கிற ஆதங்கமெல்லாம், கவியரசரின் பாடல்கள் மக்களுக்குப் போய்ச் சேர்ந்தது போல, கவிதைகளும்  போயச்சேர வேண்டும் என்பது தான். அண்மையிலே எனது தலைமையிலே.. “கண்ணதாசனின் புகழுக்கு பெரிதும் காரணம் அற்புதக்கற்பனையே” என்றும் இல்லை “அனுபவ முத்திரையே” என்றும் வாதிட்டவர்கள் அனைவரும் கவிஞரின் திரைப்பட பாடல்களையே மேற் கோள் காட்டிப்பேசினார்கள். ஆனால் என்னுடைய தலைமை உரை கவிஞரின் கவிதைகளைபற்றியே சுற்றி சுற்றி வந்தது.

இந்தப்பட்டிமன்றத்தை காணொலியில் கண்டு ரசித்த கவியரசரின் திருமகனார் காந்தி கண்ணதாசன் அவர்கள் அலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்தியதோடு எல்லோரும் பாடல்களுக்கு மட்டுமே முக்கியத் துவம் கொடுக்கிறார்கள். அப்பாவோடு நெருங்கிப்பழகிய நீங்களாவது அவருடைய கவிதைகளை மக்களின் பார்வைக்கு கொண்டு செல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டார். எனது ஆசையும் அது தான். வரப்போகிற இந்தத் தொடரில், பாடல்களைப் பெயர் அளவு பயன்படுத்துவேன். கவிதைகளை பெரும் அளவு பயன்படுத்துவேன் என்பதை உறுதிபட உரைக்கிறேன். வாரந்தோறும் வெளி வரப்போகும் இந்தத்தொடரின் விமர் சனங்களை வாசகர்களிடம் இருந்து பெரிதும் எதிர்நோக்குகிறேன்...
Tags:    

Similar News