ஆன்மிகம்
பிள்ளையார்

ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அழகிய பிள்ளையார் கோவில்

Published On 2020-08-08 02:22 GMT   |   Update On 2020-08-08 02:22 GMT
தஞ்சையில் உள்ள பிள்ளையார்பட்டி பிள்ளையாருக்கென்றே தோன்றிய கிராமமாகும். ஊர் மட்டுமல்ல, பிள்ளையாருக்காகவே இந்த ஊரில் ஒரு கோவிலும் அமைந்துள்ளது என்றால் இந்த ஊரின் சிறப்பு நமக்கு தெரியவரும்.
தஞ்சையில் இருந்து மேற்கு நோக்கி சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, பிள்ளையார்பட்டி என்னும் கிராமம். பிள்ளையாருக்கென்றே தோன்றிய கிராமம் இது. ஊர் மட்டுமல்ல, பிள்ளையாருக்காகவே இந்த ஊரில் ஒரு கோவிலும் அமைந்துள்ளது என்றால் இந்த ஊரின் சிறப்பு நமக்கு தெரியவரும்.

இங்குள்ள பிள்ளையார் கோவிலில், மாமன்னன் ராஜராஜ சோழனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அழகிய பிள்ளையார் வீற்றிருக்கிறார். இத்தல மூலவர் ‘ஹரித்ரா விநாயகர்’ என்று அழைக்கப்படுகிறார். ஒரே கல்லி னால் வடிவமைக்கப்பட்ட இந்த விநாயகரின் உயரம் 11 அடி. தரை மட்டத்துக்கு கீழே அமைந்துள்ள அடிபீடம் 5 அடி கொண்டது. ஒன்பதாம் நூற்றாண்டை சிறப்பித்த மாமன்னன் ராஜராஜ சோழன் காலத்தில்தான், இந்த வியத்தகு ஊரும், கோவிலும் நிர்மாணிக்கப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் சொல்கின்றனர்.

இந்த ஆலயத்தின் வரலாற்றைப் பற்றி இங்கே பார்க்கலாம்...

ராஜராஜ சோழனின் வாழ்க்கையில் மிகவும் அற்புதமான ஆலயம் என்றால் அது தஞ்சை பெருவுடையார் கோவில் எனப்படும், பெரியகோவில்தான். இந்த ஆலயத்தில் பிரதிஷ்டை செய்வதற்காக ராஜராஜ சோழன், புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசலில் உள்ள சிற்பக்கூடத்தில் இருந்து நந்தி மற்றும் விநாயகர் விக்கிரகங்களை யானை பூட்டிய தேரில் வைத்து எடுத்து வந்தான். காவிரியின் பிறப்பிடமாக இருக்கும் கர்நாடக மாநிலம் குடகில் இருந்து இந்த பிள்ளையாரை எடுத்து வந்ததாகவும் மற்றொரு கருத்து நிலவுகிறது.

அப்படி வரும் வழியில், விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்த தேரின் அச்சு முறிந்து, தேர் ஒரு இடத்தில் நின்றுவிட்டது. தேரின் அச்சு முறிந்ததால் விநாயகர் சிலையின் இடது பக்க தந்தம் உடைந்து விட்டது. இதனால் பின்னம் (சேதம்) அடைந்த சிலை, தஞ்சை பெரிய கோவிலுக்கு வேண்டாம் என்று ராஜராஜ சோழன் முடிவு செய்து விட்டான். இருப்பினும் விநாயகர் சிலையை, அதே பகுதியில் பிரதிஷ்டை செய்து ஒரு ஆலயத்தை எழுப்பினான். அதுவே பிள்ளையார்பட்டி விநாயகர் ஆலயம் ஆகும். அந்த ஊரும் பிள்ளையார்பட்டி என்று பெயர்பெற்றது.

இப்போது உள்ள கோவில் 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. சோழர் கால கட்டிட அமைப்பில் கோவில் அமைந்துள்ளது. 11 அடி உயரமும், 5 அடி அகலமும் உள்ள பிள்ளையாரை பீடத்தில் அமர்த்தி, அதன் மீது ஆலயத்தை கட்டியதாக சொல்லப்படுகிறது. இதற்கான அடையாளங்களும் உள்ளன. பெரிய பிள்ளையாரை தரிசிக்க, மிகவும் அடக்கமாக செல்ல வேண்டும் என்பதற்காக சிறிய நுழைவுவாசல் அமைக்கப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.

இந்தக் கோவிலில் குடமுழுக்கு நடைபெற உள்ளதையொட்டி தற்போது பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இங்கு புதிதாக ஐயப்பன், சிவன், நவக்கிரக சன்னிதிகளும் கட்டப்பட்டு வருகின்றன. இந்தக் கோவிலில் சிவன், நவக்கிரகம், கால பைரவர் ஆகிய சன்னிதிகள் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளது விசேஷமானது. இந்த ஆலயத்தில் கார்த்திகை சோம வார வழிபாடு, பிரதோஷம், அஷ்டமி பூஜை, கிருத்திகை வழிபாடு ஆகியவை விமரிசையாக நடைபெறும்.

கேது நிவர்த்தி தலம்

இங்குள்ள விநாயகர் சிலை, தமிழகத்திலேயே உயரமான சிலை என்று குறிப்பிடப்படுகிறது. ஒரே கல்லில் செதுக்கப்பட்ட இந்த சிலையில் ஒரு தந்தம் உடைந்து காணப்படுகிறது. பிள்ளையாரின் முதுகு பகுதியில் ஸ்ரீ சக்கரம் அமைந்துள்ளது. அமர்ந்த கோலத்தில் உள்ள விநாயகரின், நாபி (தொப்புள்) அருகில் பாம்பு ஒன்று படமெடுத்தபடி உள்ளது. அது விநாயகரின் உடலை சுற்றிய நிலையில் காணப்படுகிறது. விநாயகரின் உடல் முழுவதும் பாம்புகள் பின்னப்பட்டுள்ளது. எனவே இந்த தலம் கேது நிவர்த்தி தலமாக கருதப்படுகிறது. திருமண தடை நீக்கவும், புத்திர பாக்கியம் கிடைக்கவும், தீராத நோயை தீர்க்கவும் உகந்த ஆலயம் என்பதால் ஏராளமான பக்தர்கள் இந்தக் கோவிலுக்கு வந்து வழிபட்டுச் செல்கிறார்கள். பொதுவாக விநாயகருக்கு, எலிதான் வாகனமாக இருக்கும். ஆனால் இங்கு நந்தியே விநாயகரின் முன்புறம் வாகனமாக இருக்கிறது.

அமைவிடம்

தஞ்சையில் இருந்து 7 கிலோமீட்டர் தொலை வில் அமைந்துள்ள இந்தக் கோவிலுக்கு டவுன் பஸ் வசதி உண்டு. ஆட்டோ, ஷேர் ஆட்டோ, மினி பஸ் மூலமும் சென்று வரலாம்.

-டி.ஆரூண், பிள்ளையார்பட்டி 
Tags:    

Similar News