செய்திகள்
கொரோனா தடுப்பூசி

தமிழகத்தில் 2-வது நாளில் 3 ஆயிரத்து 30 பேருக்கு கொரோனா தடுப்பூசி

Published On 2021-01-18 01:03 GMT   |   Update On 2021-01-18 01:03 GMT
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்த தொடங்கிய 2-வது நாளில் 3 ஆயிரத்து 30 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
சென்னை:

இந்தியா முழுவதும் நேற்று முன்தினம் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டது. தமிழகத்தில் நேற்று முன்தினம் 160 மையங்களில் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசிகளும், 6 மையங்களில் ‘கோவிஷீல்டு’ மற்றும் ‘கோவேக்சின்’ தடுப்பு மருந்துகளும் செலுத்தப்பட்டது. அந்த வகையில் முதல் நாளான நேற்று முன்தினம் மட்டும் 3 ஆயிரத்து 27 பேர் ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்து செலுத்திக்கொண்டனர். மேலும் 99 பேர்‘ கோவேக்சின்’ தடுப்பு மருந்து செலுத்திக்கொண்டனர்.

இதன்படி முதல் நாளில் மட்டும் தமிழகத்தில் 3 ஆயிரத்து 136 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. 2-வது நாளாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

தமிழகத்தில் நேற்று 158 மையங்களில் ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்தும், 6 மையங்களில் ‘கோவிஷீல்டு’ மற்றும் ‘கோவேக்சின்’ தடுப்பு மருந்துகளும் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாலை 6 மணி நிலவரப்படி தமிழகத்தில் நேற்று 2 ஆயிரத்து 847 பேருக்கு ‘கோவிஷீல்டு’ மருந்துகளும், 183 பேருக்கு ‘கோவேக்சின்’ மருந்துகளும் என மொத்தம் 3 ஆயிரத்து 30 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை 5 ஆயிரத்து 874 பேருக்கு ‘கோவிஷீல்டு’ மருந்துகளும், 282 பேருக்கு ‘கோவேக்சின்’ மருந்துகளும் என மொத்தம் 6 ஆயிரத்து 156 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News