செய்திகள்
கொலை

திருவிடைமருதூர் அருகே கத்தியால் குத்தி ஊராட்சி உறுப்பினர் கொலை: அண்ணன்-தம்பி கைது

Published On 2020-08-28 12:50 GMT   |   Update On 2020-08-28 12:50 GMT
திருவிடைமருதூர் அருகே காதல் தகராறில் ஊராட்சி வார்டு உறுப்பினரை கத்தியால் குத்தி கொலை செய்த அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர்.

கும்பகோணம்:

கும்பகோணம் அருகே உள்ள வண்ணக்குடி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கல்யாண சுந்தரம் (வயது31) இவர் வண்ணக்குடி ஊராட்சி வார்டு உறுப்பினராக உள்ளார். இவரது உறவுக்கார பெண்ணை அதே பகுதியைச் சேர்ந்த நவீன் (23) என்பவர் காதலித்து வந்ததாக தெரிகிறது. இதனால் கல்யாண சுந்தரம், நவீனை கடந்த சில தினங்களுக்கு முன்பு கண்டித்தார். 

இதுகுறித்து நேற்று முன்தினம் இரவு நவீன், அவரது அண்ணன் மகேந்திரன் (29) ஆகிய இருவரும் கல்யாண சுந்தரத்திடம் பேசினர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மகேந்திரன் மற்றும் நவீன் ஆகியோர் கல்யாண சுந்தரத்தை கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்று விட்டனர். கத்திக்குத்தில் படுகாயமடைந்த கல்யாணசுந்தரம் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இது குறித்து திருவிடைமருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மகேந்திரன்(29) மற்றும் அவரது தம்பி நவீன்(23) ஆகிய இருவரையும் கைது செய்தனர். நேற்று மதியம் பிரேத பரிசோதனைக்கு பின் கல்யாணசுந்தரம் உடல் வண்ணக்குடி கொண்டு செல்லப்பட்டு மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. மேலும் வண்ணக்குடி பகுதியில் அசம்பாவிதங்களை தவிர்க்க ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News