ஆன்மிகம்
சிதம்பரம் சிவகாமி அம்மன்

சிதம்பரம் சிவகாமி அம்மன் கோவிலில் ஐப்பசி பூர விழா தொடங்கியது

Published On 2020-11-03 07:42 GMT   |   Update On 2020-11-03 07:42 GMT
சிதம்பரம் சிவகாமி அம்மன் கோவிலில் ஐப்பசி பூர விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிவகங்கை குளம் அருகே சிவகாமி அம்மனுக்கு தனி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஐப்பசி பூர விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பின்னர் கொடிமரத்துக்கு சிறப்பு பூஜை நடைபெற்று, விழா கொடியேற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவில் வருகிற 9-ந்தேதி முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெறுகிறது. தொடர்ந்து 10-ந் தேதி பட்டு வாங்கும் உற்சவமும், 11-ந் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர். விழாவையொட்டி தினசரி சாமி வீதிஉலா நடைபெறுவது வழக்கம். கொரோனா ஊரடங்கால் சாமி வீதி உலா செல்ல அனுமதி பெறவேண்டும் என காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினர் கோவில் தீட்சிதர்களிடம் கூறியிருந்தனர்.

அந்த வகையில் இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் சிதம்பரம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன் தினம் நடைபெற்றது. இதில் காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், கோவில் பொது தீட்சிதர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சாமி வீதிஉலாவிற்கு உரிய முறையில் அனுமதி கடிதத்தை எழுதி கொடுத்து அனுமதி பெற வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது.

இதற்கு கோவில் தீட்சிதர்களில் ஒரு பிரிவினர் சாமி வீதிஉலா நிகழ்ச்சிக்கு நாம் எப்போதும் அனுமதி கேட்கும் பழக்கம் இல்லை எனக்கூறி எதிர்ப்பு தெரிவித்து விட்டு சென்றுவிட்டனர். இதற்கிடையே தீட்சிதர்களின் மற்றொரு பிரிவினர் தாங்கள் அனுமதி பெற்று அரசின் விதிமுறைகள் மீறாமல் சாமி வீதி உலா நிகழ்ச்சி நடத்தி கொள்வதாக தெரிவித்தனர். மேற்படி சாமி வீதிஉலாவின் போது அரசின் விதிமுறைகள் மீறப்படாமல் கண்காணிக்க போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டது. இதனையடுத்து தீட்சிதர்கள் சாமி வீதிஉலா நடத்த அனுமதிக்கப்பட்டனர்.
Tags:    

Similar News