செய்திகள்
காசிமேட்டில் மீன் வாங்க குவிந்த மக்கள்

காசிமேட்டில் மீன் வாங்க அலைமோதிய பொதுமக்கள்

Published On 2021-04-30 08:22 GMT   |   Update On 2021-04-30 08:22 GMT
தமிழக அரசு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சிக் கடைகள் செயல்படவும், மீன் மார்க்கெட்டுகளில் விற்பனைக்கு தடை விதித்தும் உத்தரவு பிறப்பித்தது.

ராயபுரம்:

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து தினமும் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

கடந்த வாரத்தில் இருந்து தான் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டதால் அதற்கு முந்தைய நாளான சனிக்கிழமை அன்று இறைச்சிக் கடைகளிலும், மீன் மார்க்கெட்டுகளிலும் கடந்த வாரம் கூட்டம் அலைமோதியது.

இந்தநிலையில் தமிழக அரசு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சிக் கடைகள் செயல்படவும், மீன் மார்க்கெட்டுகளில் விற்பனைக்கு தடை விதித்தும் உத்தரவு பிறப்பித்தது.

இதன் மூலம் நாளையும், நாளை மறுநாளும் சென்னை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் இறைச்சிக் கடைகளும், மீன் மார்க்கெட்டுகளும் மூடப்பட்டு இருக்கும்.

இதனையடுத்து இன்று வெள்ளிக்கிழமை என்பதையும் பொருட்படுத்தாமல் மீன் மார்க்கெட்டுகளில் கூட்டம் அலைமோதியது. அதேபோன்று இறைச்சி கடைகளிலும் கோழி மற்றும் ஆட்டு இறைச்சிகளை வாங்குவதற்கு மக்கள் அதிக ஆர்வம் காட்டினார்கள்.

காசிமேடு மீன் மார்க்கெட்டில் கொரோனாவை மறந்து மக்கள் வெள்ளம் போல் திரண்டதை காண முடிந்தது.

ஆயிரக்கணக்கான மக்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளுக்கு தேவையான மீன்களை வாங்குவதற்கு ஒரே நேரத்தில் காசிமேட்டில் கூடியதால் சமூக இடைவெளி மறைந்து போனது. ஒரு சிலர் மட்டுமே முககவசங்களை அணிந்து வந்திருந்தனர். பெரும்பாலானவர்கள் முககவசம் அணியாமலேயே மார்க்கெட்டுக்கு வந்து மீன் வாங்கி சென்றனர்.

இதனால் கொரோனா பரவல் மேலும் அதிகரித்து விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

காசிமேடு மீன் மார்க்கெட் தண்டையார்பேட்டை மண்டலத்துக்குள் உள்ளது. இந்த மண்டலத்தில் 1,979 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்தநிலையில் காசிமேடு மீன் மார்க்கெட்டில் மக்கள் கொரோனாவை மறந்து அதிகளவில் திரண்டது மாநகராட்சி அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

இதையடுத்து சமூக இடைவெளியை மறந்து முககவசம் அணியாமல் கூடியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அதேநேரத்தில் முககவசம் அணிவதன் அவசியம் குறித்து மீன் வளத்துறை சார்பில் விழிப்புணர்வும் மேற்கொள்ளப்பட்டது.

இதற்கிடையே நாளையும், நாளை மறுநாளும் இறைச்சி வகைகளை வாங்க முடியாது என்பதால் பலர் இன்றே வியாபாரிகளிடம் ஆடு மற்றும் கோழி இறைச்சிகளை ஆர்டர் செய்து வைத்துள்ளனர். இறைச்சி வியாபாரிகளும் அதற்கு ஏற்ற வகையில் நாளையும், நாளை மறுநாளும் வீடுகளுக்கு சென்று இறைச்சியை விற்பனை செய்யவும் முடிவு செய்து இருக்கிறார்கள்.

Tags:    

Similar News