செய்திகள்
தற்கொலை செய்துகொண்ட விவசாயி அம்ரீந்தர் சிங்

டெல்லி எல்லையில் போராட்ட களத்தில் மேலும் ஒரு விவசாயி விஷம் குடித்து தற்கொலை - தொடரும் அவலம்

Published On 2021-01-10 15:10 GMT   |   Update On 2021-01-10 15:10 GMT
டெல்லி எல்லையில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளில் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
புதுடெல்லி:

வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி டெல்லி எல்லையில் விவசாயிகள் 46-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர விவசாய சங்கங்களுக்கும், மத்திய அரசுக்கும் இடையே 8 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

ஆனால், 8 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளது. வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என விவசாய அமைப்புகள் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளன.

அதேவேளை சட்டத்தில் திருத்தம் வேண்டுமானால் கொண்டுவரலாம் ஆனால், வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வாய்ப்பே இல்லை என மத்திய அரசு பிடிவாதமாக உள்ளது. இதனால், விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், மத்திய அரசு தங்கள் போராட்டத்தை மதிப்பதில்லை மற்றும் வேளாண் சட்டங்களை ரத்து செய்யவில்லை என்ற ஏக்கத்தில் பல விவசாயிகள் போராட்ட களத்திலேயே தற்கொலை செய்துகொண்டு தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் தவறான முடிவை எடுத்து வருகின்றனர்.

ஏற்கனவே பல விவசாயிகள் போராட்ட களத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் பதேக்ராப் சாகிப் மாவட்டத்தை சேர்ந்த 40 வயதான விவசாயி அம்ரீந்தர் சிங் டெல்லி எல்லையான சிங்கு பகுதியில் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.

ஆயிரக்கணக்கான விவசாயிகளை போல இவரும் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.

மத்திய அரசுடன் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போதும் அத்தனையும் தோல்வியில் முடிவடைந்ததால் அம்ரீந்தர் சிங் மிகுந்த மன வருத்தத்தில் இருந்துள்ளார்.

மிகுந்த மன வருத்தத்தில் இருந்த அம்ரீந்தர் சிங் சிங்கு எல்லையில் போராட்ட களத்தில் நேற்று இரவு விஷம் குடித்துள்ளார். அம்ரீந்தர் விஷம் குடித்தது குறித்து அறிந்த சக விவசாயிகள் அவரை அரியானாவில் உள்ள மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு சென்றனர்.

மருத்துவமனையில் ம்ரீந்தர் சிங்கை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என அறிவித்தனர்.

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி நடைபெற்று வரும் போராட்டத்தில் பங்கேற்ற விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News