செய்திகள்
பிரதமர் மோடி

மருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு இந்த ஆண்டில் 27 சதவீத இடஒதுக்கீடு -பிரதமர் தகவல்

Published On 2021-07-29 10:35 GMT   |   Update On 2021-07-29 12:56 GMT
பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கும் இந்த ஆண்டு முதல் 10 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
புதுடெல்லி:

மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (ஓபிசி) 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என மத்திய அரசு கூறியிருந்தது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருந்தது.

இந்நிலையில் மருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு நடப்பு கல்வியாண்டில் இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவ படிப்புகளில் அகில இந்திய கோட்டாவில் 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும். இதன் மூலம் சுமார் 1,500 மாணவர்கள் இளங்கலை மருத்துவ படிப்புகளில் பயன்பெறுவர். முதுகலை மருத்துவப் படிப்புகளில் ஆண்டுக்கு சுமார் 2,500 மாணவர்கள் பயன்பெறுவர்.

இதுதவிர பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கும் இந்த ஆண்டு முதல் 10 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இத்தகவலை பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது நாட்டில் சமூக நீதியின் புதிய முன்னுதாரணத்தை உருவாக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News