செய்திகள்

ஸ்காட்லாந்தில் மீண்டும் பொது வாக்கெடுப்பு நடத்த அரசு தீவிரம்

Published On 2017-03-13 14:35 GMT   |   Update On 2017-03-13 14:35 GMT
பிரிட்டனில் இருந்து பிரிந்து தனி நாடாக செயல்படுவது தொடர்பாக ஸ்காட்லாந்தில் மீண்டும் பொதுவாக்கெடுப்பு நடத்த அரசு முடிவு செய்து, இதற்காக பாராளுமன்றத்திடம் அனுமதி கேட்க உள்ளது.
லண்டன்:

பிரிட்டனின் ஓர் அங்கமாக உள்ள ஸ்காட்லாந்து, தனி நாடாகப் பிரிந்து செல்ல விரும்பியது. இதுதொடர்பாக 2014-ம் ஆண்டு பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால், ஸ்காட்லாந்து, பிரிட்டனிலிருந்து பிரிய எதிர்ப்பு தெரிவித்து 55 சதவீத மக்கள் வாக்களித்ததால் அந்த முயற்சி தோல்வியடைந்தது.

இந்நிலையில், பிரிட்டனில் இருந்து பிரிந்து சுதந்திர நாடாக செயல்படும் வகையில் மீண்டும் வாக்கெடுப்பு நடத்த ஸ்காட்லாந்து முடிவு செய்துள்ளது. இதற்காக பாராளுமன்றத்தில் அனுமதி கேட்கப்படும் என முதல் மந்திரி நிகோலா ஸ்டர்ஜியான் கூறியுள்ளார்.

பாராளுமன்றம் ஒப்புதல் அளித்தால், இந்த ஆண்டின் பிற்பாதியிலும் அடுத்த ஆண்டு முதல் பாதியிலும் வாக்கெடுப்பை நடத்த விரும்புகிறார் நிகோலா. இதன்மூலம், பிரெக்சிட் நடைமுறையைத் தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவு குறித்து ஸ்காட்லாந்து தெரிவிக்க முடியும் என்பதால் இந்த வாக்கெடுப்பு தொடர்பாக மீண்டும் அழுத்தம் கொடுக்கப்படுகிறது.

பிரெக்சிட் நடைமுறையின்போது ஸ்காட்லாந்து நலன்களை கருத்தில் எடுத்துக்கொள்ள பிரிட்டன் தவறிவிட்டது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

கடந்த ஜூன் மாதம் பிரெக்சிட் வாக்கெடுப்பின்போது, ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் நீடிக்க வேண்டும் என ஸ்காட்லாந்து வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.

Similar News