செய்திகள்
தடுப்பூசி முகாமில் சமூக இடைவெளியின்றி பெண்கள் கூட்டமாக வரிசையில் நிற்பதை காணலாம்.

சமூக இடைவெளியை மறந்து கூட்டமாக கூடுவதால் கொரோனா பரவும் அபாயம்

Published On 2021-06-30 10:56 GMT   |   Update On 2021-06-30 10:56 GMT
காரைக்குடி செஞ்சை பகுதியில் நடைபெற்ற முகாமில் தடுப்பூசி போடுவதற்காக மக்கள் நீண்ட வரிசையில் போதிய சமூக இடைவெளியில்லாமல் காத்திருந்தனர்.
காரைக்குடி:

கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்கும் வகையில் தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி மக்களிடம் அரசு அறிவுறுத்தி வருகிறது. ஆரம்ப கட்டத்தில் பொதுமக்களிடையே ஒருவித அச்ச உணர்வு ஏற்பட்ட காரணத்தினால் இதில் அவர்கள் போதிய அக்கறை செலுத்தாமல் இருந்தனர். இந்தநிலையில் கொரோனாவின் 2-வது அலையில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு உயிரிழந்தும் வந்தனர்.

இதையடுத்து பொதுமக்களிடையே தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் அதிகளவு ஆர்வம் ஏற்பட்டுள்ளது. தினந்தோறும் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் இடம் குறித்து தகவல் கேட்டு தற்போது ஏராளமானோர் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், தேவகோட்டை, சிங்கம்புணரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. பெரும்பாலான அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இதுதவிர தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு அங்கு வரும் பொதுமக்களுக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. காரைக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் நடைபெற்று வரும் தடுப்பூசி முகாம்களில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து போதிய சமூக இடைவெளியில்லாமல் தடுப்பூசி போட வரிசையில் நிற்கின்றனர். இதனால் கொரோனா பரவும் அபாயம் உள்ளது. காரைக்குடி செஞ்சை பகுதியில் நேற்று நடைபெற்ற முகாமில் தடுப்பூசி போடுவதற்காக மக்கள் நீண்ட வரிசையில் போதிய சமூக இடைவெளியில்லாமல் காத்திருந்தனர். இதேபோல் காரைக்குடி ராமநாதன் செட்டியார் அரசு பள்ளியில் நடந்த முகாமிலும் நீண்ட வரிசையில் ஆண்களும், பெண்களும் வரிசையில் நின்றனர்.

இதில் பெண்கள் நின்ற வரிசையானது போதிய சமூக இடைவெளியில்லாமல் இருந்தது. பெரும்பாலான பெண்கள் தங்களது குழந்தைகளையும் அழைத்து வந்து கூட்ட நெரிசலில் காத்திருப்பதை காண முடிந்தது. எனவே வருங்காலங்களில் இவ்வாறான தடுப்பூசி முகாம்கள் நடத்துபவர்கள் ஒரு மணி நேரத்திற்கு 200 பேர் என்ற விகிதத்தில் டோக்கன் முறை வழங்கி நாள் முழுவதும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் தொடர்ந்து அந்த பகுதியில் 2 அல்லது 3 நாட்கள் வரை இந்த தடுப்பூசி முகாம்கள் நடத்தினால் மட்டுமே மக்கள் ஒன்று கூடுவதை தடுக்க முடியும் என்று சமூக ஆர்வலர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News