ஆன்மிகம்
கோவில் தோற்றம், புலீஸ்வரி

ஒரே கருவறையில் 7 அம்மன்கள் உள்ள கோவில்

Published On 2019-11-22 01:35 GMT   |   Update On 2019-11-22 01:35 GMT
நாகை மாவட்டத்தில் ‘நூபரநதி’ என்னும் கொள்ளிடம் ஆற்றின் கரையில் உள்ளது புலீஸ்வரி அம்மன் திருக்கோவில். இங்கு ஒரே சன்னிதியில் 7 அம்மன்கள் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள்.
நாகை மாவட்டத்தில் ‘நூபரநதி’ என்னும் கொள்ளிடம் ஆற்றின் கரையில் உள்ளது புலீஸ்வரி அம்மன் திருக்கோவில். இங்கு ஒரே சன்னிதியில் 7 அம்மன்கள் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள். சப்த கன்னியர்களே இங்கு வீற்றிருந்து அருள்கின்றனர். இதில் புலீஸ்வரி என்ற அம்மனாக வைஷ்ணவி தேவி இருக்கிறார். மற்ற ஆறு தேவியர்கள் முறையே பிராம்ஹி, மகேஸ்வரி, கவுமாரி, வாராயி, இந்திராணி, சாமுண்டி ஆகியோர் ஆவர்.

கொள்ளிட நதிக்கரையில் தீத்துக்குடி என்ற கிராமம் உள்ளது. இங்கு சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு அம்மன் பக்தர் இருந்தார். அவரது கனவில் தோன்றிய 7 அம்மன்களும், தாங்கள் ஒரு வனத்துக்குள் இருப்பதாகவும், தங்களை மீட்டுக் கொண்டு வந்து கொள்ளிட நதிக்கரையில் இருக்கும் புலிகள் நடமாட்டம் உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தில் பிரதிஷ்டை செய்து ஆலயம் எழுப்பும்படியும் கூறினர்.

அதன்படி அந்த பக்தர், பொதுமக்களோடு சேர்ந்து குறிப்பிட்ட இடத்தில் இருந்து 7 அம்மன் சிலைகளை கொண்டு வந்தார். பின்னர் புலிகள் நடமாட்டம் உள்ள, யாரும் செல்ல முடியாத ஓரிடத்தில் பிரதிஷ்டை செய்தனர். புலிகள் மிகுந்த பகுதி என்பதால் இங்கு பிரதானமாக இருக்கும் வைஷ்ணவி தேவிக்கு ‘புலீஸ்வரி’ என்று பெயரிடப்பட்டது. தற்சமயம் இந்த ஆலயம் புதுப்பிக்கப்பட்டு பெரிய அளவில் கட்டப்பட்டுள்ளது.

ஏழு அம்மன்களும் கொள்ளிட நதிக்கரைக்கு வந்த நாள் பங்குனி மாதம் உத்திர நட்சத்திரம் ஆகும். எனவே அந்த நாளில் இங்கு 11 நாள் உற்சவம் நடைபெறுகிறது. இந்த விழாவின் போது, ஆயிரக்கணக்கான காவடிகள் கொள்ளிட நதிக்கரையில் இருந்து புறப்பட்டு இந்த அம்மன் ஆலயத்தை வந்தடையும். அதுதவிர பால்குடங்கள் பலவிதமான நேர்த்திக்கடன்கள் இந்த அம்மனுக்கு செய்யப்படுகிறது.

இது தவிர வைகாசி விசாகம், ஐயப்பனுக்குரிய மகரஜோதி தரிசன நாட்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. ஐயப்ப பக்தர்கள் பலர் இந்த ஆலயத்தில் இருந்து இருமுடி கட்டி, சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் சென்று வருகிறார்கள்.

இந்த ஆலயத்தின் தனிச் சிறப்பே, திருமணம்தான். இங்கு அனைத்து முகூர்த்த நாட்களிலும் திருமணம் நடைபெறுவதைக் கண்கூடாகப் பார்க்கலாம். இங்கு திருமணம் செய்து கொண்டால், சகல விதமான தோஷங்களும் நீங்கும் என்பதால் இங்கு திருமணம் செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அதேப் போல் திருமண தடை உள்ள ஆண்- பெண் இருபாலாரும் இந்த ஏழு அம்மனுக்கும் வஸ்திரங்கள் சாத்தி பிரார்த்தனை செய்தால் நிச்சயம் திருமணம் கைகூடும். அப்படி திருமணம் கைகூடும் பக்தர்கள் திருமண மண்டபங்களில் திருமண நிகழ்வுகளை வைத்துக் கொண்டாலும் திருமாங்கல்யத்தை புலீஸ்வரி அம்மன் சன்னிதியில் தான் வைத்து கட்டுகிறார்கள். இதை ஒரு நேர்த்திக் கடனாகவே அனைவரும் செய்கிறார்கள்.

இந்த அம்மனிடம் வேண்டி குழந்தை வரம் பெற்றவர்கள் குழந்தைக்கு பெயர் வைக்கும் வைபவத்தை இந்த ஆலயத்தில்தான் நடத்துகிறார்கள். அப்படிப் பெயர் வைக்கும் வைபவம் நடத்தி முடித்தவுடன் சில காலம் கழித்து அந்த குழந்தையை இக்கோவிலில் அம்மனிடம் தத்து கொடுத்து, பின் வாங்கிக் கொள்கிறார்கள்.

இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

அமைவிடம்

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை மற்றும் சீர்காழியில் இருந்து கொள்ளிடத்திற்கு ஏராளமான பேருந்து வசதி உள்ளது.

பொ.பாலாஜி கணேஷ்
Tags:    

Similar News