ஆன்மிகம்
பண்ருட்டி அருகே காளியம்மனுக்கு 1,008 பால்குட அபிஷேகம்

பண்ருட்டி அருகே காளியம்மனுக்கு 1,008 பால்குட அபிஷேகம்

Published On 2021-03-03 07:18 GMT   |   Update On 2021-03-03 07:18 GMT
காளியம்மன் கோவில் மாசிமகத் திருவிழாவை முன்னிட்டு பச்சை ஆடை அணிந்து இருந்த ஆண், பெண் பக்தர்கள் 1,008 பேர் மேளதாள முழக்கத்துடன் பால் குடங்களை தலையில் சுமந்தபடி ஊர்வலமாக புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தனர்.
பண்ருட்டி அருகே எலவத்தடியில் அமைந்துள்ள வாழவந்தான் காளியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசிமகத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நேற்று விழாவின் சிகர நிகழ்ச்சியாக 1,008 பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இதை முன்னிட்டு காலை 6 மணியளவில் அங்குள்ள காக்கை அய்யனாரப்பன் கோவில் குளக்கரையில் இருந்து பச்சை ஆடை அணிந்து இருந்த ஆண், பெண் பக்தர்கள் 1,008 பேர் மேளதாள முழக்கத்துடன் பால் குடங்களை தலையில் சுமந்தபடி ஊர்வலமாக புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தனர்.

அதன்பிறகு மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி பால்குடங்களை வாழை இலையில் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து காளியம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இரவு அம்மன் வீதி உலா நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை எலவத்தடி கிராமமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்து இருந்தனர்.
Tags:    

Similar News