வழிபாடு
ஐயப்பசாமிக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி

ஐயப்பசாமிக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி ஊர்வலம் ஆரன்முளாவில் இருந்து நாளை புறப்படுகிறது

Published On 2021-12-21 05:32 GMT   |   Update On 2021-12-21 05:32 GMT
மண்டல பூஜைக்காக நாளை (புதன்கிழமை) காலை 7 மணிக்கு தங்க அங்கி ஊர்வலம் ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து சபரிமலைக்கு புறப்படுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை வருகிற 26-ந் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி தினமும் 60 ஆயிரம் பக்தர்கள் சபரிமலைக்கு செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மண்டல பூஜைக்காக நாளை (புதன்கிழமை) காலை 7 மணிக்கு தங்க அங்கி ஊர்வலம் ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து சபரிமலைக்கு புறப்படுகிறது. பல்லக்கு வாகனத்தில் புறப்படும் அங்கிக்கு போலீஸ் சார்பில் துப்பாக்கி ஏந்திய வரவேற்பு அளிக்கப்படுகிறது.

நாளை இரவு ஓமல்லூரிலும், 23-ந் தேதி இரவு கோண்ணியிலும், 24-ந் தேதி பெரிநாட்டிலும் இரவு நேரம் தங்கிய பிறகு 25-ந் தேதி மதியம் தங்க அங்கி பம்பை கணபதி கோவில் வந்து சேரும். பின்னர் அங்கிருந்து மேள, தாளம் முழங்க பக்தர்கள் தலைச்சுமையாக தங்க அங்கியை சன்னிதானத்திற்கு கொண்டு செல்வார்கள். அன்று மாலை 5.30 மணிக்கு சன்னிதானத்திற்கு வந்து சேரும் தங்க அங்கிக்கு திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும். பின்னர் 18-ம் படிக்கு கீழ் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு மற்றும் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி ஆகியோரிடம் தங்க அங்கி ஒப்படைக்கப்படும்.

தொடர்ந்து 18-ம் படி வழியாக கொண்டு செல்லப்படும் தங்க அங்கி 6.30 மணிக்கு ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு அலங்கார தீபாராதனை நடைபெறும். பின்னர் வழக்கமான பூஜைகளுடன் இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும். மீண்டும் 26-ந் தேதி அதிகாலை 3.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். காலை 11 மணிக்கு நடைபெறும் களபாபிஷேகத்திற்கு பிறகு 11.55 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் மண்டல பூஜைகள் நடைபெறும். அத்துடன் 41 நாள் மண்டல பூஜை நிறைவு பெறும்.
Tags:    

Similar News