செய்திகள்
கோப்புபடம்

அமெரிக்காவில் கொரோனாவால் 5 லட்சம் பேர் மரணம் - இத்தாலியில் பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு

Published On 2021-02-22 09:58 GMT   |   Update On 2021-02-22 09:58 GMT
அமெரிக்காவில் இதுவரை 5 லட்சம் பேர் கொரோனா பாதிப்பால் மரணம் அடைந்துள்ள நிலையில் இத்தாலியிலும் பாதிப்பு மீண்டும் அதிகரித்து உள்ளது.

வாஷிங்டன்:

கொரோனா பாதிப்பு இன்னும் உலகை விட்டு வைக்கவில்லை.

உலக அளவில் கொரோனா பாதிப்பு இதுவரை 11 கோடியே 19 லட்சத்து 54 ஆயிரத்து 201 ஆக உள்ளது. 24 லட்சத்து, 77 ஆயிரத்து 819 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. என்றாலும், கொரோனா பாதிப்பு தொடர் கதையாகவே உள்ளது. இந்தியாவிலும் பாதிப்புகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை. மராட்டிய மாநிலம் போன்றவற்றில் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு சமீப காலமாக குறைந்து வருகிறது. என்றாலும், தொடர்ந்து உயிர் இழப்புகள் நடந்து வருகின்றன. அமெரிக்காவில் இதுவரை 5 லட்சம் பேர் கொரோனா பாதிப்பால் மரணம் அடைந்துள்ளனர்.

கொரோனா கட்டுப்பாடுகளை அமெரிக்கா விதித்து ஒரு வருடம் ஆகிறது. 1918-ம் ஆண்டு ‘புளூயன்சா’ நோய் தொற்றில் இருந்து அமெரிக்கா மீண்டது. கடந்த 102 ஆண்டுகளில் சந்தித்த நோய்களில் கொரோனா பாதிப்பு பெரிது அல்ல. என்றாலும் தற்போதைய சூழ்நிலை மோசமானதுதான் என்று அமெரிக்க வெள்ளை மாளிகை மருத்துவ ஆலோசகர் ஆண்டனி தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், இத்தாலி நாட்டில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. கொரோனா புதிய தொற்று பரவல் காரணமாக அங்கு மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன. இத்தாலியில் பொதுமக்கள் வார இறுதிநாளில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

இத்தாலியில் தொற்று நோய் பரவல் மீண்டும் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தி இருப்பதாக ரோம் நகரை சேர்ந்த மருத்துவ நிபுணர் மாசி மோகப்லி தெரிவித்துள்ளார். தற்போதைய நிலவரப்படி மஞ்சள் பகுதியாக அறிவிக்கப்பட்டிருந்த இடங்கள் ஆபத்தை குறிக்கும் ஆரஞ்சு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. கட்டுப்பாடுகள் அதிகரித்து உள்ளதால் இத்தாலி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News