உள்ளூர் செய்திகள்
திருநள்ளாறு நளன் குளத்தில் பக்தர்கள் புனித நீராடிய காட்சி.

தொடர் விடுமுறை எதிரொலி- திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்

Published On 2022-04-16 05:30 GMT   |   Update On 2022-04-16 05:30 GMT
தமிழ் புத்தாண்டு உள்ளிட்ட தொடர் விடுமுறையை முன்னிட்டும், இன்று சனிக்கிழமை என்பதாலும், நேற்று இரவு முதல் பக்தர்கள் குவிந்தனர்.
காரைக்கால்:

காரைக்கால் அருகே திருநள்ளாறில் உலகப் புகழ்மிக்க சனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

தமிழ் புத்தாண்டு உள்ளிட்ட தொடர் விடுமுறையை முன்னிட்டும், இன்று சனிக்கிழமை என்பதாலும், நேற்று இரவு முதல் பக்தர்கள் குவிந்தனர். மேலும் இன்று அதிகாலை முதலே புதுச்சேரி, சென்னை, கடலூர், காஞ்சிபுரம், சேலம், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநில, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்தனர்.

கோவில் நிர்வாகம் மற்றும் போலீசாரின் முன் ஏற்பாட்டால் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அமைதியாக சாமி தரிசனம் செய்தனர்.

தர்ம தரிசனம் மற்றும் கட்டண தரிசனம் என 2 வகை தரிசனங்களை கோவில் நிர்வாகம் சுவாமி தரிசனத்திற்கு அனுமதி வழங்கியுள்ளனர்.

மேலும் சனீஸ்வர பகவானின் தீர்த்தக் குளமான நளன் தீர்த்தத்தில் அதிகாலை முதல் பொதுமக்கள் புனித நீராடி வழிபட்டனர். மேலும் சனீஸ்வர பகவானுக்கு அர்ச்சனைகள், அபிஷேகம் பூஜைகள் நடைபெற்றன.

இதில் பக்தர்கள் எள் தீபம் ஏற்றி தங்களது தோ‌ஷங்கள் நீங்க வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர். அதிக அளவிலான பக்தர்கள் வருகை காரணமாக திருநள்ளாறு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 


Tags:    

Similar News