ஆன்மிகம்
திருநள்ளாறு

திருநள்ளாறில் 27-ந்தேதி சனிபெயர்ச்சி: முன்பதிவு செய்தால் மட்டுமே கோவிலுக்குள் அனுமதி

Published On 2020-12-11 09:38 GMT   |   Update On 2020-12-11 09:38 GMT
திருநள்ளாறு சனிபெயர்ச்சி விழாவில் பங்கேற்க விரும்பும் உள்ளூர், வெளியூர் பக்தர்கள் அனைவரும், ஆன்லைனில் முன்பதிவு செய்வது அவசியம். முன்பதிவு செய்தால் மட்டுமே பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
காரைக்கால் :

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருகே திருநள்ளாற்றில், உலக புகழ்மிக்க தர்பாராண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சனிபகவான் தனி சன்னதி கொண்டு அணுக்கிரஹ மூர்த்தியாக அருள்பாலித்து வருகிறார்.

இந்த கோவிலில், சனிக்கிழமை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிபெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

இந்த கோவிலில், 2½ஆண்டுக்கு ஒருமுறை வாக்கியப்பஞ்சாங்கப்படி சனிபெயர்ச்சி விழா நடைபெறுவது வழக்கம். சில சமயங்களில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை சனிப்பெயர்ச்சிவிழா நடைபெறும்.

அந்த வகையில், கடந்த சனிபெயர்ச்சி விழா கடந்த 2017 டிசம்பரில் நடைபெற்றது. தற்போது 3 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 27-ந் தேதி காலை 5.22 மணிக்கு நடைபெறுகிறது. அப்போது சனிபகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பிரவேசிக்கிறார்.

சனிபெயர்ச்சி விழாவிற்கு இன்னும் 2 வாரங்கள் உள்ள நிலையில், விழா ஏற்பாடுகள் மாவட்ட கலெக்டர் அர்ஜூன்சர்மா, கோவில் நிர்வாக அதிகாரி ஆதர்ஷ் ஆகியோர் தலைமையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

கோவிலுக்கு சொந்தமான விருந்தினர் விடுதியில், சனிப்பெயர்ச்சி விழாவை எவ்வாறு நடத்துவது? பக்தர்கள் எவ்வாறு அனுமதிக்கப்படுவார்கள்? கோவில் சார்பிலான முன் ஏற்பாடுகள் என்ன? என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தின் முடிவில் கலெக்டர் அர்ஜூன்சர்மா நிருபர்களிடம் கூறியதாவது:-

திருநள்ளாறு சனிபெயர்ச்சி விழா மத்திய, மாநில அரசுகளின் கொரோனா விதிகளுக்கு உட்பட்டு வருகிற 27-ந் தேதி சமூக இடைவெளியோடு நடைபெறும். விழாவில் பங்கேற்க விரும்பும் உள்ளூர், வெளியூர் பக்தர்கள் அனைவரும், ஆன்லைனில் முன்பதிவு செய்வது அவசியம். (ஆன்லைன் முகவரி - www.thirunallarutemple.org ). முன்பதிவு செய்தால் மட்டுமே பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த நடைமுறையானது, சனிபெயர்ச்சி விழா அன்றும், சனிபெயர்ச்சி விழாவுக்கு முந்தைய இருவார இறுதி நாட்கள் (சனி, ஞாயிறு) மற்றும் பிந்தைய 4 வார இறுதி நாட்கள் (சனி, ஞாயிறு) நடைமுறையில் இருக்கும். கோவிலுக்கு வரும் பக்தர்கள் முக கவசம் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும்.

கோவில் வாசலில் நலவழித்துைறை ஊழியர்கள் உடல் வெப்பமானி மூலம் பரிசோதனை செய்த பிறகே பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். அருகிலேயே மருத்துவ ஆம்புலன்ஸ், டாக்டர்கள் இருப்பார்கள். கொரோனா அறிகுறி இருந்தால் உரிய சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

சனிபெயர்ச்சி அன்று கோவில் சார்பில், 3 இடங்களில் அன்னதானம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கொரோனா காலத்தை முன்னிட்டு சனிபகவானின் நளன் குளத்தில் பக்தர்கள் நீராட இதுவரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

சனிபெயர்ச்சி அன்று பக்தர்கள் குளிக்கலாமா? அல்லது வேறு மாற்று ஏற்பாடுகள் என்ன என்பது குறித்து உரிய ஆலோசனைக்கு பிறகு அறிவிக்கப்படும்.

வெளிமாவட்டங்களில் இருந்து பக்தர்கள் திருநள்ளாறு வந்து செல்ல தேவையான பஸ் ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. பக்தர்களின் பாதுகாப்புக்கு முந்தைய ஆண்டுகளில் ஏற்பாடு செய்த வாகன பார்க்கிங் வசதிகள், கூடுதல் போலீசார் உள்ளிட்ட ஏற்பாடுகளும் செய்யப்படும்.

மேலும், ரூ.1000 ரூ.600 மற்றும் ரூ.300 தனிநபர் விரைவு தரிசன டிக்கெட் மூலம் சிறப்பு நுழைவு வாயிலின் வழியாக விரைவாக பக்தர்கள் தரிசனம் செய்யலாம். இந்த தரிசன டிக்கெட்டை, இலவச கார், வாகன பாஸாகவும் பயன்படுத்தி கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News