செய்திகள்
கோப்புபடம்

வாழ்வாதாரமின்றி தவிக்கும் ஆரம்ப சுகாதார நிலைய துப்புரவு பணியாளர்கள் - கூடுதல் சம்பளம் வழங்க கோரிக்கை

Published On 2021-10-25 05:28 GMT   |   Update On 2021-10-25 05:28 GMT
அறிவிக்கப்பட்ட சம்பளம் வழங்கப்படாததால் கொரோனாவுக்கு பின் பலரும் பணிக்கு செல்லாமல் உள்ளனர்.
திருப்பூர்:

மத்திய அரசின்  தேசிய கிராமப்புற சுகாதார திட்டத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்  மாநிலத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் துப்புரவு ஊழியர்கள், இரவு காவலர் என 10 ஆயிரம் பேர் பணியமர்த்தப்பட்டனர். இவர்களுக்கு மாதம் ரூ.1500 மட்டுமே சம்பளம் வழங்கப்படுகிறது.

‘காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்‘ என வலியுறுத்தி, தொழிற்சங்கத்தினர் ஐகோர்ட்டில் தொடுத்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை மையமாக வைத்து, கடந்த 2017, ஏப்ரல் 5ல் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அரசாணை வெளியிட்டது. 

அதில், குறைந்தபட்ச கூலி சட்டத்தின் அடிப்படையில் 3,140 ஆர்.சி.எச்., (மகப்பேறு மற்றும் குழந்தைப்பராமரிப்பு) சுகாதார ஊழியர்களுக்கு கலெக்டர் நிர்ணயம் செய்யும் தினக் கூலியை அடிப்படையாக வைத்து அதற்கு நிகரான சம்பளம் வழங்க பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறை இயக்குனருக்கு உத்தரவிடப்பட்டது. 

ஆனால் இதுவரை இந்த உத்தரவு அமலுக்கு வராததால் சொற்ப சம்பளத்தில் மட்டுமே அவர்கள் பணிபுரிகின்றனர். கொரோனா சமயத்தில் இவர்களின் பணி முக்கியத்துவம் பெற்றிருந்தது. இருப்பினும் அறிவிக்கப்பட்ட சம்பளம் வழங்கப்படாததால் கொரோனாவுக்கு பின் பலரும் பணிக்கு செல்லாமல் உள்ளனர்.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு சுகாதார நிலைய அனைத்து ஊழியர் சங்க மாநில தலைவர் கிருஷ்ணமூர்த்தி, துணைத் தலைவர் வெங்கடாச்சலம் உள்ளிட்ட நிர்வாகிகள் திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் சங்க உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தினர். பணிக்கு செல்லாமல் உள்ள ஊழியர்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்தினர்.

இதுகுறித்து சங்க தலைவர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில்:

சட்டசபை தேர்தலுக்கு பின் எங்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அந்த நம்பிக்கையில் உள்ளோம். பலரும் மன உளைச்சலுக்கு ஆளாகி பணிக்கு செல்லாமல் உள்ளனர். இதனால் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. விரைவில் ஆரம்ப சுகாதார ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றார்.
Tags:    

Similar News