செய்திகள்
கோப்பு படம்

தேனி அருகே பள்ளி ஆசிரியைக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு

Published On 2019-12-04 09:53 GMT   |   Update On 2019-12-04 09:53 GMT
தேனி அருகே பள்ளி ஆசிரியை பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தேனி அரசு மருத்துவகல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உத்தமபாளையம்:

தேனி மாவட்டம் தேவாரம் ராமர் காலனி தெருவைச் சேர்ந்தவர் வித்யா (வயது 36). அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த 27-ந் தேதி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தேவாரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றார். அவரது ரத்தம் பரிசோதனை செய்யப்பட்ட போது டெங்கு பாதிப்பு இல்லை எனவும், காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுமாறும் டாக்டர்கள் கூறினர்.

ஆனால் தொடர்ந்து சளி தொல்லை அதிகரித்ததால் தேனி அரசு மருத்துவ கல்லூரியில் சிகிச்சைக்கு வந்தார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வித்யாவுக்கு பன்றி காய்ச்சல் இருப்பதை உறுதி செய்தனர். இதனையடுத்து அவரை தனி வார்டில் வைத்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மேலும் அவரது குடும்பத்தினருக்கும் தடுப்பு மருந்துகள் வழங்கி சோதனை செய்து வருகின்றனர். இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கையில், கடந்த வாரம் இதே பகுதியைச் சேர்ந்த அரசு பஸ் டிரைவர் கார்த்திக் காய்ச்சல், சளி பாதிப்பில் சிக்கி உயிரிழந்தார். தற்போது மீண்டும் ஒரு பள்ளி ஆசிரியைக்கு பன்றி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது அதிர்ச்சி அளித்துள்ளது என்றனர்.

இதே போல் தேனி மாவட்டம் தேவதானப்பட்டி காந்தி மைதான வீதியைச் சேர்ந்த இளையராஜா மகள் தாட்சாயினி (9). 5-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று அவரது ரத்த மாதிரி ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. இதில் மாணவிக்கு டெங்கு காய்ச்சல் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவரை மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
Tags:    

Similar News