செய்திகள்
கைது

பெல் அதிகாரி வீட்டில் திருடிய வேலைக்கார பெண் உள்பட 2 பேர் கைது

Published On 2021-08-05 05:45 GMT   |   Update On 2021-08-05 05:45 GMT
பெல் அதிகாரி வீட்டில் வேலை செய்து வந்த பர்வீன் என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் போலீசார் விசாரித்தனர்.
வேலூர்:

வேலூர் சத்துவாச்சாரி டபுள் ரோட்டை சேர்ந்தவர் பிச்சாண்டி (வயது 63). ஓய்வுபெற்ற பெல் அதிகாரி. இவர் கடந்த 1-ந் தேதி மதியம் ஸ்ரீராம் நகரில் உள்ள சாவு வீட்டுக்கு சென்றார். வீட்டில் அவரது சித்தப்பா மட்டும் இருந்தார். அந்த நேரத்தில் இவரது வீடு புகுந்து லாக்கரில் இருந்த 30 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.70 ஆயிரம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

இதுகுறித்து சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். பிச்சாண்டியின் வீட்டிற்கு வந்து சென்றவர்கள் யார் என்பது குறித்த விவரங்களை போலீசார் சேகரித்தனர்.

இதில் பிச்சாண்டி வீட்டில் வேலை செய்து வந்த பர்வீன் (வயது 25) என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் போலீசார் விசாரித்தனர்.

பர்வீன் அவரது உறவினர் பெண்ணுடன் சேர்ந்து நகை, பணத்தை கொள்ளையடித்தது தெரியவந்தது. பர்வீன் சொந்த ஊர் ஆற்காடு. அவரது கணவருடன் தகராறு காரணமாக வள்ளலார் தண்ணீர் தொட்டி அருகே உள்ள உறவினர் நஷீர் என்பவரது வீட்டில் தங்கியிருந்தார்.

அங்கிருந்து பிச்சாண்டி வீட்டுக்கு வந்து வீட்டு வேலைகளை செய்து விட்டு செல்வார். சம்பவத்தன்று பிச்சாண்டி குடும்பத்தினர் வெளியே சென்றது குறித்து அவரது உறவினர் பஷீரின் மனைவி பானு (40) என்பவரிடம் கூறினார். இருவரும் சேர்ந்து நகை, பணத்தை கொள்ளையடிக்க முடிவு செய்தனர்.

பிச்சாண்டி வீட்டுக்கு வந்த இருவரும் லாக்கரில் இருந்த 30 பவுன் நகை, ரூ.70 ஆயிரம் பணத்தை கட்டைப் பையில் எடுத்துக் கொண்டு சென்றுவிட்டனர். இந்த தகவலை அறிந்த போலீசார் பர்வீன், பானு ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நகை, பணத்தை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News