செய்திகள்
ஜிகே வாசன்

மாணவர்கள் நலன் கருதி ஆன்-லைன் விளையாட்டுக்களை தடை செய்ய வேண்டும் - ஜிகே வாசன் வலியுறுத்தல்

Published On 2021-05-24 06:54 GMT   |   Update On 2021-05-24 06:54 GMT
விஞ்ஞான வளர்ச்சி பல நேரங்களில் நல்லதாகவும், சில நேரங்களில் சங்கடமாகவும் அமைந்து விடுகிறது என ஜிகே வாசன் கூறியுள்ளார்.

சென்னை:

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

விஞ்ஞான வளர்ச்சி பல நேரங்களில் நல்லதாகவும், சில நேரங்களில் சங்கடமாகவும் அமைந்து விடுகிறது. அவற்றை நாம் கையாளும் முறையில் தான் இருக்கிறது.

இந்தியாவில் மட்டுமல்ல உலகலவில் ஆன்லைன் சூதாட்டத்தால் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் ஈடுபட்டு, தனது சொத்துக்களையும். பணத்தையும் இழந்து அவற்றில் இருந்து மீள முடியாமல் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள். இதனால் தமிழகத்தில் பலபேர் தற்கொலை செய்து கொண்டார்கள் என்பதை அறிந்திருப்பீர்கள். இவற்றின் தீவிரத்தை உணர்ந்த தமிழக அரசு ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடைவிதித்தது.


ஆன்லைன் சூதாட்டம் போல் ஆன்லைனில், பொழுதுபோக்கு விளையாட்டு செயலிகள் அதாவது பப்ஜி போன்ற விளையாட்டு சாதனங்கள், இளைஞர்களையும், மாணவர்களையும் பாழ்படுத்தி அவர்களின் எதிர்காலத்தையை கேள்வி குறியாக்கியது. அவற்றையும் அரசு தடைசெய்துள்ளது. ஆனால் தற்போது அவை வேறு ஒரு ரூபத்தில் இந்தியாவில் நுழைய உள்ளது என்ற செய்தி ஊடகங்கள் மற்றும் தொலைகாட்சியின் வாயிலாக தெரிகிறது.

தற்போது கொரோனா ஊரடங்கினால் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக கல்லூரிகளும், பள்ளிக்கூடங்களும் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக தான் மாணவர்களுக்கு பாடங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் ஆன்லைனில் பப்ஜி போன்ற விளையாட்டு செயலிகள் வந்தால் மாணவர்கள் கவனம் சிதறி படிப்பதை விட்டுவிட்டு ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையாகுவார்கள். இதனால் மனரீதியாகவும், கல்வி கற்பதிலும் மிகுந்த பாதிப்பை அடைவார்கள். ஆகவே ஆன்லைன் விளையாட்டு எந்த மாற்றத்துடன் வந்தாலும் அவற்றை ஆரம்பத்திலேயே மத்திய-மாநில அரசுகள் தடைசெய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News