செய்திகள்
கடலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த ரமேஷ் எம்.பி.யை சி.பி.சி.ஐ.டி. போலீசார் அழைத்து வந்த காட்சி.

தி.மு.க. எம்.பியை விசாரிக்க சி.பி.சி.ஐ.டி.க்கு நீதிபதி அனுமதி

Published On 2021-10-13 08:05 GMT   |   Update On 2021-10-13 08:05 GMT
முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் ரமேஷ் எம்.பி.யிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு 1 நாள் அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.
கடலூர்:

கடலூர் தி.மு.க. எம்.பி. ரமேசுக்கு சொந்தமான முந்திரி தொழிற்சாலை பண்ருட்டி அருகே பணிக்கன்குப்பத்தில் உள்ளது. இந்த தொழிற்சாலையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மேல்மாம்பட்டு பகுதியை சேர்ந்த கோவிந்தராசு (வயது 55). பா.ம.க. பிரமுகர். தொழிலாளியாக வேலைப் பார்த்து வந்தார்

கடந்த மாதம் 19-ந் தேதி கோவிந்தராசு மர்மமான முறையில் இறந்தார். பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் அடித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

இந்த வழக்கை விசாரித்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த 9-ந்தேதி அதிகாலை கடலூர் எம்.பி. ரமேஷ், அவரது உதவியாளர் நடராஜன், முந்திரி தொழிற்சாலை மேலாளர் கந்தவேல், அல்லாப்பிச்சை, சுந்தர் என்கிற சுந்தர்ராஜ், வினோத் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் ரமேஷ் எம்.பி. தவிர மற்ற 5 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.


இந்த நிலையில் கடந்த 11-ந்தேதி பண்ருட்டி மாஜிஸ்திரேட் கோர்ட்டு 1-ல் ரமேஷ் எம்.பி. சரணடைந்தார். சரண் அடைந்த ரமேஷ் எம்.பி.யை 2 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் கடலூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார். கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் ரமேசுக்கு நடத்தபட்ட சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யபட்டது.

இந்த நிலையில் கடலூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இன்று ரமேஷ் எம்.பி.யை சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆஜர்படுத்தினர். வழக்கு விசாரணை நீதிபதி பிரபாகரன் தலைமையில் நடந்தது. ரமேஷ் எம்.பி. தரப்பில் வக்கீல்கள் சிவராஜ், கதிர்வேலன் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.

சி.பி.சி.ஐ.டி. போலீசார் ரமேஷ் எம்.பியை தங்கள் வசம் எடுத்து 2 நாட்கள் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி பிரபாகரன், இந்த வழக்கு தொடர்பாக ரமேஷ் எம்.பி.யிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு 1 நாள் அனுமதி அளித்து உத்தரவிட்டார்.


Tags:    

Similar News