பெண்கள் உலகம்
அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கும்போது கவனிக்க வேண்டிய அம்சங்கள்

அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கும்போது கவனிக்க வேண்டிய அம்சங்கள்

Published On 2021-12-18 02:16 GMT   |   Update On 2021-12-18 02:16 GMT
எந்த மாதிரி அம்சங்கள் அத்தியாவசியமானவை எந்த அம்சங்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை என்று தெரிந்து வீடு வாங்குவது நல்லது.
அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் உண்டு. ஏனென்றால் பெரிய அடுக்குமாடி குடியிருப்புகளில் பல வசதிகள் இருக்கும். குழந்தைகள் விளையாடுவதற்கும் பெரியவர்கள் நடைபயிற்சி செய்வதற்கும், பூங்காவில் உட்கார்ந்து அரட்டை அடிப்பதற்கும் என்று விஸ்தாரமான இடம் இருக்கும். பல பேருடன் பழகுவதற்கு ஏற்றதாக இருக்கும் என்று நினைப்பவர்கள் உண்டு. இந்த நிலையில் எந்த மாதிரி அம்சங்கள் அத்தியாவசியமானவை எந்த அம்சங்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை என்று தெரிந்து வீடு வாங்குவது நல்லது.

சில அம்சங்கள் மிகவும் அவசியமானவை. செக்யூரிட்டி சிஸ்டம், லிப்ட் போன்றவை கண்டிப்பாக இருக்க வேண்டிய அம்சங்கள். சில விற்பனையாளர்கள் வாடிக்கையாளரை கவருவதற்காக தேவையற்ற அம்சங்களை பெரிதுபடுத்திக் காட்டி மனதை தூண்டுவார்கள். ஆனால் வீடு வாங்குபவர் தங்களுடைய தேவை, பொருளாதார வசதி போன்றவற்றை கருத்தில் கொண்டு அதற்கேற்ற அம்சங்களை தேர்ந்தெடுப்பது நல்லது.

ஒரு குடியிருப்பில் நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடம் (ஜிம்), பூங்கா போன்றவை இருந்தால் அதற்கு அதிக பராமரிப்பு தேவைப்படும். எனவே மாதாந்திர கட்டணம் அதற்கேற்றவாறு அதிகமாக இருக்கும். இந்த கட்டணத்தை வீடு வாங்குவதற்கு முன்பாகவே நாம் அனுமானித்துக் கொள்ள வேண்டும். குடியிருப்பில் இருக்கும் அம்சங்களை அவசியம் தேவையானது, இல்லை என்றாலும் பரவாயில்லை, தேவையே இல்லாதவை என்று பிரித்துக் கொண்டு அதற்கேற்றவாறு நாம் தேர்ந்தெடுக்க வேண்டும்.

வீடு வாங்குவோரில் ஒரு சிலர் எனக்கு வீடு மட்டும் நன்றாக இருந்தால் போதும் இதர வசதிகள் அம்சங்கள் எதுவும் தேவை இல்லை என்று கூறுபவராக இருக்கலாம். ஆனால் சிலர் நீச்சல்குளம், ஜிம், கிளப் ஹவுஸ், ஸ்பா போன்றவை அவசியம் இருக்க வேண்டும் என்று எண்ணுவார்கள். எனவே அவரவர் தேவையை மனதில் கொண்டு வீட்டை தேர்ந்தெடுக்க வேண்டும்.

அவசியமான அம்சங்கள் என்றால் கார் பார்க்கிங், செக்யூரிட்டி சர்வீஸ், வாட்டர் சப்ளை, எலிவேட்டர், மின்சார தட்டுப்பாடு இல்லாமல் இருக்க இன்வெர்ட்டர் வசதி மற்றும் 24 மணி நேர பராமரிப்பு போன்றவையாகும். சொகுசு வசதிகள் என்றால் நடை பயிற்சி மற்றும் ஓடும் பாதை, விளையாட்டு பகுதி, கிளப் ஹவுஸ். நீச்சல் குளம், ஜிம், ரூப்டாப் கார்டன், லவுஞ்ச், ஸ்பா மற்றும் சலூன், ரெஸ்டாரன்ட், பார்ட்டி ஹால், கோவில், சினிமா ஹால், வைஃபை வசதி போன்றவைகள் ஆடம்பர சொகுசு வசதிகள் என்று கூறலாம். இந்த வசதிகள் எல்லாம் இருக்கும் குடியிருப்பில் வீடு வாங்குவோர் அதற்கேற்ற விலையையும், மாதாந்திர பராமரிப்பு தொகையை அதிகமாகவும் தான் கொடுக்க வேண்டி இருக்கும். எனவே தங்களுக்கு எந்தந்த வசதிகள் வேண்டும் என்பதை முழுமையாக தெரிந்து கொண்டு அந்த வசதிகள் உள்ள குடியிருப்பை தேர்ந்தெடுப்பது நல்லது.
Tags:    

Similar News