செய்திகள்
பாராளுமன்றம்

31 மசோதாக்களை நிறைவேற்ற முடிவு- பாராளுமன்றம் நாளை கூடுகிறது

Published On 2021-07-18 07:49 GMT   |   Update On 2021-07-18 07:49 GMT
ரபேல் விமான ஒப்பந்த முறைகேடு புகார்கள் தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு காங்கிரஸ் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பாராளுமன்றத்திலும் இந்த கோரிக்கையை காங்கிரஸ் கட்சி எழுப்ப உள்ளது.

புதுடெல்லி:

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை (திங்கட்கிழமை) தொடங்க உள்ளது. இந்த கூட்டத்தொடர் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 13-ந் தேதி வரை நடைபெறும்.

இந்த கூட்டத்தொடர் வழக்கம் போல காலை 11 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாராளுமன்ற வளாகத்தில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கொரோனா பரவல் அச்சுறுத்தல் இருப்பதால் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பாராளுமன்றத்தில் தற்போது 539 எம்.பி.க்.கள் உள்ளனர். கடந்த வருடம்   பாராளுமன்றம் கூடியபோது சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதற்காக எம்.பி.க்கள் குறிப்பிட்ட இடங்களில் அமர வைக்கப்பட்டனர்.

தற்போதும் மக்களவை இருக்கைகளில் 280 எம்.பிக்கள் அமர வைக்கப்படுகிறார்கள். மீதமுள்ள 259 எம்.பி.க்கள் பார்வையாளர்கள் மாடத்தில் அமர வைக்கப்படுவார்கள்.

இதன் காரணமாக பாராளுமன்ற கூட்டத்தொடரை பார்க்க பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது.

இந்த மழைக்கால கூட்டத்தொடரில் 31 மசோதாக்களை கொண்டு வந்து நிறைவேற்ற மத்திய அரசு தீர்மானித்துள்ளது. அதுபோல 6 அவசர சட்டங் களை நிறைவேற்றவும் மத்திய அரசு திட்ட மிட்டுள்ளது.

இந்த கூட்டத்தொடரில் 19 அமர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அந்த சமயங்களில் முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதங்கள் நடைபெறும். அரசின் முக்கிய கொள்கை அறிவிப்புகளை இந்த கூட்டத்தொடரில் வெளியிட பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார்.

இந்த கூட்டத்தொடரில் மத்திய அரசுக்கு எதிரான பல முக்கிய விவகாரங்களை எழுப்ப எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. குறிப்பாக கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு, ரபேல் விமான ஒப்பந்த முறைகேடு புகாரில் பிரான்சில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு இருப்பது, விவசாயிகள் போராட்டம், பெட்ரோல், டீசல் விலை உயர்வு போன்றவை குறித்து எதிர்கட்சிகள் கேள்விகளை எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ரபேல் விமான ஒப்பந்த முறைகேடு புகார்கள் தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு காங்கிரஸ் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பாராளுமன்றத்திலும் இந்த கோரிக்கையை காங்கிரஸ் கட்சி எழுப்ப உள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப் விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த வேளாண் சட்டங்களை ரத்து செய்வது தொடர்பாக இந்த கூட்டத்தொடரில் காங்கிரஸ் கேள்வியை எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது தவிர மாநில வாரியாகவும் இடம் பெற்றுள்ள கட்சிகள் தனது மாநில கோரிக்கையை வலியுறுத்தி இந்த கூட்டத் தொடரில் கோ‌ஷங்களை எழுப்புவார்கள் என்று தெரிகிறது. குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் காவிரி நதியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டும் பிரச்சனையை எழுப்புவார்கள் என்று தெரிகிறது.

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பாராளுமன்ற கூட்டத்தொடரில் தி.மு.க. எம்.பி.க்கள் இந்த கோரிக்கையை வலியுறுத்த முடிவு செய்துள்ளனர்.

இதனால் பாராளுமன்ற நடவடிக்கைகள் சுமூகமாக நடைபெறுமா என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது. பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை பயனுள்ள வகையில் நடத்தி முடிக்க மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

பாராளுமன்ற மேல்சபையை சிறப்பாக நடத்துவது குறித்து துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் மேல்சபை நடவடிக்கைகள் சுமூகமாக நடக்க எதிர்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்த நிலையில் இன்று பகல் 11 மணிக்கு பாராளுமன்ற அனைத்துக்கட்சி கூட்டத்தை மத்திய அரசு நடத்தியது. பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் காங்கிரஸ், தி.மு.க., இடதுசாரிகள், ஆம்ஆத்மி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். தி.மு.க. சார்பில் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா ஆகியோர் அனைத்துக்கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டனர். மழைக்கால கூட்டத்தொடரில் மேற்கொள்ள வேண்டிய அம்சங்கள் பற்றி இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று மாலை 4 மணிக்கு பாராளுமன்ற கட்சி தலைவர்களின் கூட்டத்திற்கு சபாநாயகர் ஓம்பிர்லா அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டத்தில் மக்களவையில் எத்தகைய விவாதங்களை மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றி ஆய்வு செய்யப்பட உள்ளது.

இதற்கிடையே பாரதிய ஜனதாவின் நிர்வாக குழு கூட்டமும் இன்று டெல்லியில் நடக்கிறது. அதில் பாராளுமன்றத்தில் சிறப்பாக செயல்படுவது பற்றி பேசப்படுகிறது.

மற்றொருபுறம் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கூட்டமும் டெல்லியில் நடக்கிறது. காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டத்தையும் சோனியா கூட்டி உள்ளார். சோனியா காந்தி காணொலி காட்சி மூலம் இந்த கூட்டத்தில் பங்கேற்கிறார்.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் எவ்வாறு செயல்பட வேண்டும். எத்தகைய பிரச்சனைகளை பாராளுமன்றத்தில் எழுப்ப வேண்டும் என்பது பற்றி முடிவு செய்யப்படுகிறது. எல்லா கட்சிகளும் இன்று அடுத்தடுத்து ஆலோசனையில் ஈடுபட்டு இருப்பதால் டெல்லி அரசியலில் விறுவிறுப்பான சூழ்நிலை உருவானது.


இதையும் படியுங்கள்... 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

Tags:    

Similar News