செய்திகள்
சென்னை ஐகோர்ட்

ஐகோர்ட்டு தடை - பேனர் அச்சடிப்பது நிறுத்தப்பட்டதால் 7 லட்சம் பேர் பாதிப்பு

Published On 2019-09-18 07:05 GMT   |   Update On 2019-09-18 07:05 GMT
பேனர்கள் வைப்பதற்கு சென்னை ஐகோர்ட் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால் பேனர் அச்சடிக்கும் தொழிலாளர்கள் 7 லட்சம் பேர் பாதிப்படைந்துள்ளனர்.
சென்னை:

நகரில் பேனர்கள் வைப்பதற்கு ஐகோர்ட்டு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

கோர்ட்டு உத்தரவை மதிக்காமல் விதியை மீறி பேனர்கள் வைக்கப்படுகின்றன. அதிகாரிகள், காவல் துறையினர் அவற்றை கண்டுகொள்வது இல்லை என்று குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டன.

இந்தநிலையில் கடந்த 12-ந்தேதி மாலை பள்ளிக்கரணை-ரேடியல் சாலையில் ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்த பெண் என்ஜினீயர் சுபஸ்ரீ மீது அ.தி.மு.க. வினர் வைத்த பேனர் விழுந்தது. இதில் நிலை தடுமாறி விழுந்த அவர் மீது தண்ணீர் லாரி மோதி பரிதாபமாக உயிர் இழந்தார்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அ.தி.மு.க. பிரமுகர் மீது வழக்கு தொடரப்பட்டது. லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார். பேனர் அச்சடித்து கொடுத்த அச்சகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

இதையடுத்து அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகள், தங்கள் கட்சி நிகழ்ச்சிக்காக பேனர் வைக்க தடை விதித்தன. ஐகோர்ட்டு தானாக முன்வந்து தடையை மீறி பேனர் வைக்க அனுமதித்தது யார்? பேனர் தொடர்பாக கோர்ட்டு விதித்த கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படுகின்றனவா? போலீசாரும், அதிகாரிகளும் எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்று கேள்வி எழுப்பியது. நடந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தது.

முறையாக அனுமதி பெறாத டிஜிட்டல் பேனர்களை அச்சடிப்பது நிறுத்தப்பட்டது. அரசியல் கட்சிகள் சார்பில் டிஜிட்டல் பேனர்கள் தயாரிப்பதும் திரும்ப பெறப்பட்டன.

அதிகாரிகள், போலீஸ் கெடுபிடிகாரணமாக வழக்கமான நிகழ்ச்சிகளுக்கும் பேனர் அச்சடிக்க கொடுப்பதை பொதுமக்கள் நிறுத்தினார்கள். இதனால் கடந்த சில தினங்களாக பேனர் தயாரிக்கும் தொழில் பாதிக்கப்பட்டது.

தமிழ்நாடு டிஜிட்டல் பிரிண்டிங் அசோசியேசன் சங்கத்தினர் இது குறித்து கூறியதாவது:-

நடந்த சம்பவத்துக்குப் பிறகு அரசியல் கட்சிகள் தொடர்பான டிஜிட்டல் பேனர்கள் தயாரிப்பதை தவிர்த்து வருகிறோம். திருமணம், பிறந்தநாள், குடும்பவிழாக்கள், கோவில் விழாக்கள் போன்றவற்றுக்கு தான் அதிக அளவில் டிஜிட்டல் பேனர்கள் தயாரித்து கொடுக்கிறோம். அரசியல் கட்சிகளுக்கு தயாரித்து கொடுக்கும் பேனர்கள் மொத்த எண்ணிக்கையில் 10 சதவீதம் தான்.

தமிழ்நாட்டில் ஏராளமான டிஜிட்டல் பிரிண்டிங் சென்டர்கள் இருக்கின்றன. இதில் ஏராளமானோர் பணிபுரிந்து வருகிறார்கள். பேனர் தயாரிப்பதற்கு அனுமதி பெற வேண்டும் என்ற திடீர் அறிவிப்பும், பெண் என்ஜினீயர் மரணத்தை அதிகாரிகள், போலீசார் காட்டும் கெடுபிடியும் சில தினங்களாக டிஜிட்டல் பிரிண்டிங் தொழிலை முடக்கிவிட்டன.

எதிர்பாராமல் நடந்த சம்பவத்தால் டிஜிட்டல் பேனர் தயாரிக்கும் தொழில் பெரும் நெருக்கடியை சந்திக்கும் நிலை ஏற்பட்டு விட்டது. டிஜிட்டல் பேனர் வைக்க அனுமதி பெற வேண்டும் என்ற விதியை முறைப்படுத்த வேண்டும். எளிமைபடுத்த வேண்டும். அவ்வாறு செய்யாததால் தான் அனுமதி பெறாமல் டிஜிட்டல் பேனர்களை வைக்கிறார்கள்.

கோர்ட்டு உத்தரவு காரணமாக அதிகாரிகளும், போலீசாரும் மீண்டும் மீண்டும் நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள். ஏராளமான வழக்குகளை பதிவு செய்கிறார்கள். இதனால் டிஜிட்டல் பிரிண்டிங் தொழில் மேலும் பாதிப்பு அடையும் வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

டிஜிட்டல் பிரிண்டர் சங்க தலைவர் சுரேஷ் கூறியதாவது:-

தமிழ்நாடு டிஜிட்டல் பிரிண்டர்ஸ் சங்கத்தில் 12 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இந்த தொழிலை நம்பி 7 லட்சம் பேர் பிழைக்கிறார்கள். இது இந்த தொழிலை செய்யும் தொழிலாளர்களுக்கும் அவர்களை நம்பி இருப்பவர்களுக்கும் வாழ்வாதாரமாகவே இருக்கிறது.

டிஜிட்டல் பேனர் அச்சடிப்பதற்கு எதிராக அரசும், அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்தால் பெரும் பாதிப்பு ஏற்படும். எனவே இந்த தொழிலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் நடைமுறைகளை எளிதாக்கி பொதுமக்களுக்கும் சிரமம் ஏற்படாமல் சுமூக தீர்வுகாண வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சிறிய டிஜிட்டல் அச்சகம் வைத்துள்ளவர்கள் கூறியதாவது:-

கடன் வாங்கியும், நகைகளை அடகு வைத்தும் சிறிய டிஜிட்டல் அச்சகம் நடத்தி வருகிறோம். ஆனால் சமீபத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு காரணமாக டிஜிட்டல் பேனர்களை அச்சிட முடியாத நிலை உள்ளது. இதற்கு முதலீடு செய்துள்ள தொகைக்கு மாதந்தோறும் ரூ.22 ஆயிரம் வரை மாத தவனை செலுத்த வேண்டியது இருக்கிறது. தொழில் நடைபெறவில்லை என்றால் எப்படி கடனை அடைக்க முடியும்? இதை நம்பிவாழும் தொழிலாளர்கள் நிலை என்ன ஆகும்? அரசியல் கட்சிகள், சினிமா ரசிகர்கள், குடும்ப விழாக்கள், நண்பர்கள் சந்திப்பு, பொது நிகழ்ச்சிகளுக்கு பேனர்கள் வைக்காவிட்டால் பெரிய அளவில் தொழில் நடத்துவது கஷ்டம்தான்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News