உள்ளூர் செய்திகள்
முக ஸ்டாலின்

மழை பாதித்த பகுதிகளை ஆய்வு செய்ய மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி பயணம்

Published On 2021-12-02 06:47 GMT   |   Update On 2021-12-02 06:47 GMT
கன மழையால் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடியில் வெள்ள சேதங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பார்வையிடுகிறார்.
தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாளில் இருந்து தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் கடந்த 25-ந் தேதி வரலாறு காணாத அளவில் அதிகனமழை கொட்டியது.

இதன் காரணமாக தூத்துக்குடி மாநகர பகுதிகளிலும், புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்தது. திருச்செந்தூரில் தேங்கிய தண்ணீர் ஒரே நாளில் வடிய வைக்கப்பட்டு அங்கு இயல்பு நிலை திரும்பியது.

இதேபோல் மாவட்டத்தில் ஒரு சில இடங்களிலும் தண்ணீர் வடிந்தநிலையில் தூத்துக்குடி மாநகர பகுதியில் பெரும்பாலான இடங்களிலும், புறநகரில் சில பகுதிகளிலும் இன்னும் மழைநீர் தண்ணீர் தேங்கி உள்ளது.



தூத்துக்குடி முத்தம்மாள் காலனி, ராம்நகர், ரகுமத் நகர், ஆதிபராசக்தி நகர், வீட்டு வசதி குடியிருப்பு, அம்பேத்கார் நகர், பிரையண்ட் நகர், சிதம்பர நகர் பகுதிகளில் வீடுகளை சூழ்ந்து 2 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கி உள்ளது.

தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகம், ஒருங்கிணை நீதிமன்ற வளாகம், இ.எஸ்.ஐ. மருத்துவமனை வளாகம் உள்ளிட்ட பகுதிகளிலும் தண்ணீர் வடியாமல் உள்ளது. மாநகர பகுதிகளில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம் முழுவதும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இந்த வளாகத்தில் தான் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்ட அலுவலகம் போன்ற முக்கிய கல்வி அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

இதனால் அங்கு வரும் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் திண்டாடி வருகின்றனர்.

இதேபோல் மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் தூத்துக்குடி மாநகர பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளிகள், தூத்துக்குடி தாலுகாவுக்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவித்து கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவிட்டார்.

இந்நிலையில் கன மழையால் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடியில் வெள்ள சேதங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பார்வையிடுகிறார்.


Tags:    

Similar News