செய்திகள்
நடிகை சஞ்சனா

நடிகை சஞ்சனாவுக்கு மருத்துவ பரிசோதனை நடத்த கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2020-12-08 02:17 GMT   |   Update On 2020-12-08 02:17 GMT
உடல் நலக்குறைவை காரணம் காட்டி ஜாமீன் கேட்டதால் நடிகை சஞ்சனாவுக்கு மருத்துவ பரிசோதனை நடத்த வேண்டும் என்று கர்நாடக ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
பெங்களூரு :

பெங்களூருவில் போதைப்பொருள் விற்பனை மற்றும் கன்னட திரை உலகில் போதைப்பொருட்கள் பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் பிரபல நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோரை கடந்த செப்டம்பர் மாதம் போலீசார் கைது செய்திருந்தனர். இவர்களில் நடிகை சஞ்சனா செப்டம்பர் மாதம் 8-ந் தேதி போலீசாரால் கைது செய்யப்பட்டு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். நடிகை சஞ்சனாவுக்கு, போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் தொடர்பு இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர், போதைப்பொருட்கள் பயன்படுத்தி உள்ளாரா? என்பதை கண்டறிய அவரது தலை முடி சேகரிக்கப்பட்டு ஐதராபாத்தில் உள்ள தடய அறிவியல் ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் நடிகை சஞ்சனாவின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரி சஞ்சனா சார்பில் கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த மனு மீதான விசாரணை, ஐகோர்ட்டு நீதிபதி சீனிவாஸ் ஹரீஷ் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் நடிகை சஞ்சனாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை நிறைவு பெற்றிருந்தால், நேற்று தீர்ப்பு கூறப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் நேற்று தனக்கு ஜாமீன் கிடைக்கும் என்று சஞ்சனா நினைத்திருந்தார். இந்த நிலையில், நீதிபதி சீனிவாஸ் ஹரீஷ் முன்னிலையில், சஞ்சனாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. ஏற்கனவே நடிகை சஞ்சனா உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்படுவதால், அவரது உடல் நலத்தை காரணம் காட்டி ஜாமீன் வழங்க வேண்டும் என்று அவரது வக்கீல் வாதிட்டு இருந்தார்.

இந்த நிலையில், சஞ்சனா உடல் நலக்குறைவால் அவதிப்படுவதால், அவருக்கு வாணி விலாஸ் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை நடத்த வேண்டும் என்றும், அந்த அறிக்கையை வருகிற 10-ந் தேதி கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். சஞ்சனாவை சிறையில் இருந்து பாதுகாப்புடன் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல வேண்டும் என்றும், அந்த சந்தர்ப்பத்தில் புகைப்படம் எடுக்க அனுமதிக்க கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

குறிப்பாக சஞ்சனாவுக்கு வாணி விலாஸ் ஆஸ்பத்திரியில் நடத்தப்படும் மருத்துவ பரிசோதனைக்கு பின்பு, அந்த அறிக்கையின் ஆதாரத்தின் கீழ் ஜாமீன் வழங்குவது குறித்து நிர்ணயிக்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார். இதன் காரணமாக தனக்கு ஜாமீன் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த நடிகை சஞ்சனா பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளார்.

சஞ்சனாவின் மருத்துவ பரிசோதனையின் முடிவில் தான் வருகிற 10-ந் தேதி அவருக்கு ஜாமீன் கிடைக்குமா? அல்லது அந்த மனு தள்ளுபடி செய்யப்படுமா? என்பது தெரியவரும்.
Tags:    

Similar News