ஆன்மிகம்
வழிபாட்டுத்தலங்கள் அடைக்கப்பட்டன

கொரோனா கட்டுப்பாடு காரணமாக வழிபாட்டுத்தலங்கள் அடைக்கப்பட்டன

Published On 2021-08-14 02:45 GMT   |   Update On 2021-08-14 02:45 GMT
ஈரோட்டில் உள்ள முக்கிய கோவில்கள் நடை சாத்தப்பட்டு இருந்தன. ஆலயங்கள், பள்ளி வாசல்களும் மூடப்பட்டு இருந்தன.
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு உள்ளன. ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி உத்தரவின் பேரில் இன்று (சனிக்கிழமை), நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் ஈரோடு மாநகர் பகுதியில் பொதுமக்கள் அதிகம் கூடும் சாலைகள் அடைக்கப்பட உள்ளன.

இதுபோல் தமிழக அரசின் உத்தரவின் படி 3 நாட்கள் வழிபாட்டு தலங்கள் அடைக்கப்படுகின்றன. நேற்று ஈரோட்டில் உள்ள முக்கிய கோவில்கள் நடை சாத்தப்பட்டு இருந்தன. ஆலயங்கள், பள்ளி வாசல்களும் மூடப்பட்டு இருந்தன. ஆடி வெள்ளி அம்மனுக்கு உகந்த நாள் என்பதால் பிரசித்தி பெற்ற கோவில்களில் பக்தர்கள் கூடுவது வழக்கம். ஆனால் ஈரோட்டில் நேற்று பெரிய மாரியம்மன் கோவில் வகையறா கோவில்கள், வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவில், கருங்கல்பாளையம் சின்னமாரியம்மன் வகையறா கோவில்கள், சூரம்பட்டி வலசு மாரியம்மன் கோவில் என அனைத்து கோவில்களும் நடை சாத்தப்பட்டு இருந்தன. ஆனால் ஆங்காங்கே வீதிகளில் வைக்கப்பட்டு இருக்கும் சிறிய அளவிலான கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

ஈரோட்டில் உள்ள புனித அமல அன்னை ஆலயம், சி.எஸ்.ஐ. பிரப் நினைவு ஆலயம், ரெயில்வே காலனி திருஇருதய ஆண்டவர் ஆலயம் உள்ளிட்ட அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் வழிபாடுகள் நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால் நேற்று ஆலய நுழைவுவாயில் கதவுகள் அடைக்கப்பட்டு இருந்தன. முஸ்லிம் பள்ளிவாசல்களில் நேற்று வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெறவில்லை. 3 நாட்கள் தொழுகை நடைபெறாது என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு இருந்தது.
Tags:    

Similar News