ஆன்மிகம்
நாகர் சிலைக்கு பூஜை

நாகர் சிலைக்கு பூஜை செய்தால் தோஷம் நீங்குமா?

Published On 2020-02-27 06:58 GMT   |   Update On 2020-02-27 06:58 GMT
ஒரு கல் நாகரை வைத்து தோஷ பரிகார பூஜை செய்யும்போது அந்த பூஜை செய்யும் நபருக்குரிய தோஷங்கள் அனைத்தையும் நாகர் நீக்கிவிடுவதாக ஐதீகம்.
நாகராஜா கோவிலில் திரும்பிய திசை எல்லாம் நாகர் சிலைகளாக உள்ளது. கோவிலின் நுழைவு வாசலில் தொடங்கி நடை பாதைகளின் இரு பக்கங்களிலும் நாகர் சிலைகள் குவிக்கப்பட்டுள்ளன. கோவில் குளத்தை சுற்றியும் நாகர் சிலைகளே உள்ளன. கோவில் சுற்றுச்சுவர் மீது வரிசையாக நாகர் சிலைகளை அடுக்கி வைத்துள்ளனர்.

கோவில் உள்ளே பிரகாரத்தின் நாகர் சிலைகள் உள்ளன. கோவிலுக்கு பின்புறம் உள்ள நந்தவனத்திலும் நாகர் சிலைகள் வரிசையாக அடுக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான நாகர் சிலைகளை ஒரே இடத்தில் பார்க்கும் போகும் சற்று பிரமிப்பாக உள்ளது.

நாகர் கல் சிலைகளை தோஷ பரிகாரம் செய்வதற்காக பக்தர்கள் பயன்படுத்துகிறார்கள். பரிகார பூஜைகள் முடிந்த பிறகு பக்தர்கள் யாரும் நாகர் சிலைகளை எடுத்து செல்வது இல்லை. அவற்றை கோவிலிலேயே விட்டு சென்றுவிடுவார்கள். இதனால் நாகராஜா ஆலயத்தில் நாகர் சிலைகள் ஆயிரக்கணக்கில் சேர்ந்துவிட்டன. பொதுவாக ஒரு கல் நாகரை வைத்து தோஷ பரிகார பூஜை செய்யும்போது அந்த பூஜை செய்யும் நபருக்குரிய தோஷங்கள் அனைத்தையும் நாகர் நீக்கிவிடுவதாக ஐதீகம். அதாவது தோஷங்கள் அனைத்தையும் நாகர் தன் வசம் இழுத்துக்கொள்கிறார். இதனால் பக்தர்கள் புத்துணர்ச்சி பெறுகிறார்கள்.

அதே சமயத்தில் தோஷ பரிகாரத்துக்காக பயன்படுத்தப்படும் நாகர் சிலைகளும் ஒன்றும் இல்லாததாக மாறி விடுகிறது. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் பரிகார பூஜை முடிந்த பிறகு நாகர் சிலைகளில் எந்த சக்தியும் இருப்பதில்லை. என்றாலும் அது வழிபடபட்ட ரூபம் என்பதால் அதற்கென்று தனி மகத்துவம் நீடிக்கிறது. எனவே தான் அவற்றை கோவிலின் முக்கிய பகுதிகளில் வைத்துள்ளனர்.

நாகராஜா ஆலயத்தின் முன்பகுதியில் உள்ள அரசமரத்தடி பகுதியிலும் ஏராளமான நாகர் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. அந்த சிலைகளுக்கு பால், மஞ்சள் அபிஷேகம் செய்வதன் மூலம் பக்தர்களுக்கு உரிய பலன்கள் கிடைக்கிறது.
Tags:    

Similar News