செய்திகள்
ஜோ பைடன்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் : ஆட்சி அதிகார மாற்றத்தில் தாமதம் இருக்காது - ஜோ பைடன் நம்பிக்கை

Published On 2020-11-25 20:27 GMT   |   Update On 2020-11-25 20:27 GMT
அமெரிக்காவின் ஆட்சி அதிகார மாற்றத்துக்கான பணிகள் தாமதமாக தொடங்கியிருந்தாலும், முடிவில் தாமதம் இருக்காது என ஜோ பைடன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்:

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றார். அவர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 20-ந்தேதி அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக பதவி ஏற்கிறார்.

ஆனால் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப், தனது தோல்வியை ஒப்புக்கொள்ள தொடர்ந்து மறுத்து வருகிறார். அவரின் பிடிவாதத்தால் ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்றுவதில் சிக்கல் இருந்தது.

ஆனால் ஒரு வழியாக டிரம்ப், ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்றுவதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டார். இதையடுத்து ஆட்சி அதிகார மாற்றத்துக்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் ஆட்சி அதிகார மாற்றத்துக்கான பணிகள் தாமதமாக தொடங்கியிருந்தாலும், முடிவில் தாமதம் இருக்காது என ஜோ பைடன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் “ஆட்சி அதிகார மாற்றத்தில் வெள்ளை மாளிகையின் அணுகு முறை மிகவும் நேர்மையாக உள்ளது. இது ஒரு மெதுவான தொடக்கமாகும். ஆனாலும் இது கவலைக்குரியது அல்ல. இன்னும் 2 மாதங்கள் உள்ளன. வேகத்தை எட்டக்கூடிய திறனைப் பற்றி நான் நன்றாக உணர்கிறேன். எனவே ஆட்சி அதிகார மாற்றத்தில் தாமதம் இருக்காது” என கூறினார்.
Tags:    

Similar News