தமிழ்நாடு
வேலூர் பாலாற்றில் வெள்ளம் குறைந்து தீவுபோல் தெரியும் மணல் திட்டுகள்

வேலூர் பாலாற்றில் வெள்ளம் குறைந்தது- வீணான 70 டி.எம்.சி. தண்ணீர்

Published On 2021-12-02 07:13 GMT   |   Update On 2021-12-02 07:13 GMT
வேலூர் மாவட்டத்தில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள101 ஏரிகளில் 87 ஏரிகள் நிரம்பி உள்ளன.
வேலூர்:

ஆந்திராவில் பெய்த கனமழை காரணமாக பேத்தமங்கலம் ஏரி நிரம்பியது. அங்கிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் பாலாற்றில் ஆந்திராவில் உள்ள தடுப்பணைகள் நிரம்பி தமிழகத்திற்கு தண்ணீர் வந்தது.

மேலும் பாலாற்றில் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக வட தமிழகத்திலும் பலத்த மழை கொட்டியது. இதன் காரணமாக பாலாற்றின் கிளை ஆறுகளான கவுண்டன்யா நதி, அகரம் ஆறு, மலட்டாறு, பேயாறு உள்ளிட்டவற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

தெற்கு ஆந்திராவில் பெய்த கனமழை காரணமாக பொன்னையாற்றில் வரலாறு காணாத அளவிற்கு வெள்ளம் பெருக்கெடுத்தது.

பொன்னையாற்று வெள்ளம் ராணிப்பேட்டை அருகே பாலாற்றில் கலக்கிறது. இதனால் பாலாற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நீர்வரத்து மேலும் அதிகரித்து காணப்பட்டது.

இதனால் வாலாஜா தடுப்பணையில் இருந்து 1 லட்சத்து 5000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. பல ஆண்டுகளுக்குப் பிறகு பாலாற்றில் வரலாறு காணாத வெள்ளம் சென்றது.

பாலைவனமாக வறண்டு கிடந்த பாலாற்றில் கடந்த 2 மாதங்களாக வெள்ளம் ஆர்ப்பரித்து சென்றுகொண்டிருக்கிறது. கடந்த வாரம் பாலாற்றில் வந்த தண்ணீரின் அளவை பொதுப்பணித்துறையினர் கணக்கீடு செய்தனர். இதில் 50 டிஎம்சி தண்ணீர் வீணாக சென்றது தெரிய வந்தது. இந்த வாரம் மேலும் சுமார் 20 டிஎம்சி தண்ணீர் பாலாற்றில் இருந்து வெளியேறி உள்ளது.

இன்று காலையில் பாலாற்றில் 8 ஆயிரம் கன அடி தண்ணீரும், பொன்னை ஆற்றில் 3,814 கன அடி தண்ணீர் என மொத்தம் 11 ஆயிரத்து 814 கன அடி தண்ணீர் சென்றுகொண்டிருக்கிறது.

பாலாற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்லும் இடங்களிலெல்லாம் பொதுமக்கள் வேடிக்கை பார்த்து வருகின்றனர். ஆற்றுப்பாலங்களில் நின்று செல்பி எடுத்து மகிழ்கின்றனர். குடும்பத்தோடு வந்து பார்த்து செல்கின்றனர்.

பாலாற்றின் கரையோரங்களில் ஊற்று தண்ணீரில் துணி துவைத்து வந்த சலவைத் தொழிலாளர்கள் தற்போது வரும் தண்ணீரில் துணி துவைக்கின்றனர். தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் துணி துவைப்பது எளிதாக உள்ளது என சலவைத் தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

இது ஒரு புறமிருக்க பாலாற்றில் தற்போது வெள்ள அளவு தொடர்ந்து சரிந்து கொண்டே இருக்கிறது. கடந்த வாரம் சென்ற வெள்ளத்தை விட தற்போது பாதிக்குமேல் தண்ணீர் குறைந்துள்ளது. இதனால் பாலாற்றில் உள்ள மணல் மேடுகள் தீவுபோல் காட்சி அளிக்கிறது.

வேலூர் மாவட்டத்தில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள101 ஏரிகளில் 87 ஏரிகள் நிரம்பி உள்ளன. மற்ற ஏரிககள் நிரம்பும் தருவாயில் உள்ளது.

ஊரக அமைப்பு கட்டுப்பாட்டிலுள்ள 825 குளம் குட்டைகளில் 530 குளங்கள் நிரம்பி உள்ளன. மேலும் குளம் குட்டைகளுக்கு தண்ணீர் வந்த வண்ணம் உள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 369 ஏரிகளில் 311 ஏரிகள் நிரம்பி விட்டன. மேலும் 13 ஏரி நிரம்பும் தருவாயில் உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 49 ஏரிகளில் 33 ஏரிகள் நிரம்பி உள்ளன.

5 ஆண்டுக்கு பிறகு ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் மழை அளவு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஏரி குளங்கள் நிரம்பி உள்ளன. நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக விவசாய பணிகள் தீவிரமடைந்துள்ளன.

வேலூரின் 7 பழமொழிகளில் ஒன்றான தண்ணீரில்லாத ஆறு என்பதை இந்த ஆண்டு பாலாறு பொய்யாக்கி உள்ளது.



Tags:    

Similar News